சென்னை: கொவிட்-19 பாதிப்பின் காரணமாக இந்தியத் திரைப்படப் பணியாளர்கள் பலர் வேலையின்றி இருக்கும் இவ்வேளையில், தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் 15 இலட்சம் ரூபாய் உதவித்தொகையாக அளித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் விளம்பரங்களின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வேலையில்லாமல் இருக்கும் பெப்சி (FEFSI) உறுப்பினர்களுக்கு உதவுமாறு அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைப்படத்துறையினரிடம் கேட்டுக் கொண்டார்.
இதனை அடுத்து பல நடிகர்கள் பணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளனர்.
தற்போது, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் 15 இலட்சம் ரூபாய் உதவித்தொகையாக அளித்துள்ளது. கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து பெப்சி உறுப்பினர்களின் நலனுக்காக இந்த நன்கொடையை அளித்துள்ளனர்.