கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் குறைவாக இருப்பதால் மக்கள் அதிகம் கவலைக் கொள்வது போல் தெரியவில்லை என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
தற்போது, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறுபவர்களுக்கு 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த மார்ச் 18 முதல் ஏப்ரல் 9 வரை மொத்தம் 7,479 நபர்கள் இந்த உத்தரவை மீறியதால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை மட்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய 666 நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளதாகவும், அவர்களில் 392 பேருக்கு 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் இஸ்மாயில் சப்ரி குறிப்பிட்டார்.
விதிக்கப்படக்கூடிய அபராதம், சிறைத் தண்டனையை அதிகரிக்க தேவைப்பட்டால் சட்டத்துறைத் தலைவருடன் கலந்துரையாடுமாறு சுகாதார அமைச்சகத்திடம் அரசாங்கம் கேட்கும் என்று அவர் கூறினார்.
“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை இன்னும் ஏன் நிறைய பேர் மதிக்கவில்லை என எனக்குத் தெரியவில்லை. 1,000 ரிங்கிட் அபராதம் குறைவாக இருக்கலாம்.”
“வெளிநாடுகளில் எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில் ஏப்ரல் 17 முதல், குற்றவாளி 10,000 சிங்கப்பூர் டாலர்கள் செலுத்த வேண்டும். இரண்டாவது முறை 20,000 டாலர்கள் செலுத வேண்டும்” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.