கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்று நோய் பாதிப்புக் காரணமாக நாடெங்கிலும் கடந்த மார்ச் 18-ஆம் தேதி தொடங்கப்பட்ட நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை, பின்பு அதிகரித்து வந்த சம்பவங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டது.
பின்பு, ஒரு சில பகுதிகளில் அதிகமான கொவிட்-19 பாதிப்பு சம்பவங்கள் பதிவானதால் முழுமையான தடைக் கட்டுப்பாடு அப்பகுதிகளில் உட்படுத்தப்பட்டது.
இதனிடையே, இன்று வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சுடன் நடைபெற்ற சிறப்பு சந்திப்புக்குப் பிறகு, பிரதமர் மொகிதின் யாசின், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மூன்றாம் கட்டமாக அடுத்த ஏப்ரல் 28 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
“சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில், ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 28 வரை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது” என்று அவர் கூறினார்.
மொகிதினின் கூற்றுப்படி, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தின் நீட்டிப்பு சுகாதார ஊழியர்களுக்கு கொவிட் -19 உடன் போராடுவதற்கும், தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கும் வாய்ப்பளிக்கும் என்று நம்புவதாக குறிப்பிட்டார்.
குறுகிய காலத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீட்டுக் கொள்ளக்கூடாது எனும் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைக்கு ஏற்ப இது அமல்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
“விரைந்து நடமாட்டக் கட்டுப்பாட்டை மீட்டுக் கொண்ட நாடுகளில் மீண்டும் இந்த நோய் தொடர்ந்து பரவியது.” என்று அவர் கூறினார்.