புத்ரா ஜெயா – கொவிட்-19 விவகாரத்தில் மலேசியாவில் சுகாதார அமைச்சு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகள், மிகக் கடுமையாகப் பின்பற்றப்படும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகிய காரணங்களால் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது.
நேற்று வெள்ளிக்கிழமை ஏப்ரல் 17-ஆம் தேதி நண்பகல் 12.00 மணிவரை புதிதாக 69 கொவிட்-19 பாதிப்புகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன.
நேற்றும் மட்டும் 201 பேர் குணமடைந்துள்ளனர், எனினும் இருவர் மரணமடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மலேசியாவில் கொவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,251-ஆக உயர்ந்துள்ளது.
இன்று இருவர் மரணமடைந்ததை அடுத்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 86-ஆக அதிகரித்திருக்கிறது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
நேற்றுவரையில் 51 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 26 பேர்கள் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இன்று 201 பேர் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,967-ஆக உயர்ந்திருக்கிறது.