சென்னை – இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பில் 3-வது இடத்தை இதுநாள் வரையில் வகித்து வந்த தமிழகம் தனது தொடர் நடவடிக்கைகளின் காரணமாக தற்போது 5-வது இடத்திற்குப் பின்தங்கியிருக்கிறது.
இந்தியாவில் 3,648 பாதிப்புகளுடன் மகராஷ்டிரா மாநிலம் இன்னும் முதல் நிலையில் இருந்து வருகிறது. டில்லி 1,707 பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
ஒரே நாளில் 92 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டிருப்பதன் மூலம் மத்திய பிரதேசம் 1,402 பாதிப்புகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது.
குஜராத் 277 புதிய பாதிப்புகளுடன் மொத்தம் 1,376 பேர்களைப் பாதித்திருப்பதால் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 105 புதிய தொற்றுகள் அடையாளம் காணப்பட்டன. மொத்தம் 1,477 பாதிப்புகளையே தமிழகம் இதுவரையில் கொண்டிருக்கிறது. அதைவிட முக்கியமாக கடந்த இரண்டு நாட்களில் கொவிட்-19 பாதிப்பால் ஒரே ஒரு மரணம் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அந்த ஒருவர் ஒரு மருத்துவர் என்பது அதிர்ச்சி தரும் தகவலாக அமைந்திருக்கிறது.
நேற்று தமிழ் நாட்டில் ஒரே நாளில் 82 பேர்கள் நலமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் விழுக்காடு 26.6 என்ற அளவில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் (படம்) தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்தியா முழுமையிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையில் 17,615 என்ற எண்ணிக்கையில் கொவிட்-19 பாதிப்புகள் உயர்ந்துள்ளன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 1,134 புதிய கொவிட்-19 தொற்றுகள் இந்தியா முழுமையிலும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. மரண எண்ணிக்கை 519 ஆக உயர்ந்திருக்கிறது.