கோலாலம்பூர்: முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு உட்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ முர்னியிலிருந்து தாம் நேற்று திங்கட்கிழமை வெளியேற்றப்பட்டதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் முன்னதாக ஒரு காணொளி மூலம் தெரிவித்திருந்தார்.
அங்கிருந்து தாம் விரட்டி அடிக்கப்பட்டதாகவும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைப் போல நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
“நான் கூட்டரசுப் பிரதேசத்தின் துணை அமைச்சருக்கு பரிந்துரைகளை வழங்க முயற்சித்தேன் மற்றும் உதவி கேட்க முயன்றேன், ஆனால் அது மறுக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.
” நான் பரிந்துரைகளை வழங்கினேன். அவர்கள் ஏன் தாமான் விலாயாவில் உதவிகளை செய்யவில்லை என்று அவர்களிடம் கேட்டேன். இங்குள்ள மக்கள் ஆபத்தில் உள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
அங்குள்ள மக்களுக்கு போதுமான சமையலறை அத்தியாவசியங்கள் இல்லை என்று பல புகார்களைப் பெற்ற பின்னர் அவர் அந்த பகுதிக்கு வந்ததாகக் கூறினார்.
முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் கீழ் வரும் மண்டலத்தில் சிக்கித் தவிப்பவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சமூக நலத் துறையினர் உதவுமாறு பரிந்துரைத்ததாகவும் அவர் காணொளியில் தெரிவித்துள்ளார்.
செந்துல் காவல் துறைக்கு தாம் அழைத்து செல்லப்பட்டதாகக் கூறிய தமது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவினை அவர் பதிவிட்டிருந்தார்.
இதனிடையே, நேற்று அவர் கைது செய்யப்பட்டு காவல் துறையினரின் பிணையில் இரவு 10 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார்.