கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோய் தொடர்பான நேர்மறை சம்பவங்கள் குறைந்து வந்த போதிலும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் நிலையான இயக்க நடைமுறை அப்படியேதான் உள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
நாட்டில் கொவிட்-19 நேர்மறையான சம்பவங்கள் தொடர்ந்து சரிவைக் குறிக்கும் நிலையில், அதற்காக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அனைத்து விதிகளையும் பொதுமக்கள் மீற முடியும் என்று அர்த்தமல்ல என்று அவர் கூறினார்.
“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறும் நபர்கள் மீது காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். சம்பவங்கள் குறைக்கப்படும்போது சில நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தியதும், நேர்மறையான சம்பவங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.”
“இந்த நேர்மறையான வளர்ச்சி, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் ஒவ்வொரு கட்டளைக்கும், அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒவ்வொரு உத்தரவுக்கும், இன்னும் வலுவாக செயல்படுவதற்கு ஒரு சாதகமான விஷயமாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று இன்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.