Home One Line P2 தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி மொழி உள்நாட்டுப் படங்களுக்கு ஆதரவு ஏன்? விளக்குகிறார் ஆஸ்ட்ரோவின் மார்க் லூர்ட்ஸ்!

தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி மொழி உள்நாட்டுப் படங்களுக்கு ஆதரவு ஏன்? விளக்குகிறார் ஆஸ்ட்ரோவின் மார்க் லூர்ட்ஸ்!

817
0
SHARE
Ad
மார்க் லூர்ட்ஸ்

கோலாலம்பூர் – ஏப்ரல் மாதம் என்பது இந்தியர்களுக்கு ஒரு சிறப்பான மாதம். ஏறத்தாழ இந்தியர்களின் அனைத்துப் பிரிவினர்களுக்குமான புத்தாண்டுகள் கொண்டாடப்படுவது இந்த மாதத்தில்தான்! வழக்கமாக இந்தியர்களின் சிறப்புத் திருநாள்களின் போதும் மற்ற தருணங்களிலும் உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், உள்ளூர் திரைப்படத் துறையை மேலும் மேம்படுத்தும் வகையிலும் தொலைக்காட்சிகளுக்கெனத் தயாரிக்கப்படும் பிரத்தியேகத் தமிழ்ப் படங்களை ஒளியேற்றி ஆதரவு வழங்குவது ஆஸ்ட்ரோவின் வழக்கம்.

இந்த ஏப்ரல் மாதத்தில் முதன் முறையாக, வித்தியாச முயற்சியாக, தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகளிலும், அந்தந்த மொழிவாரி மக்களின் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு தொலைக்காட்சித் திரைப்படங்களை (டெலி மூவி) ஒளியேற்றியிருக்கிறது ஆஸ்ட்ரோ.

வைசாகி புத்தாண்டை முன்னிட்டு பஞ்சாபி மொழியில் “ரப்பா மேராயா” என்ற தொலைக் காட்சிப் படத்தையும், மலையாள மொழியில் “விஷூகனி” என்ற படத்தையும், தெலுங்கு மொழியில் “ரங்குலு” என்ற படத்தையும் ஆஸ்ட்ரோ ஒளியேற்றியிருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்தப் படங்களுக்கு அந்தந்த மொழிவாரியான இந்தியர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் படங்கள் அனைத்தும் தற்போது ஆஸ்ட்ரோ ஒன் டிமாண்ட் தளத்தில் காணக் கிடைக்கின்றன. எனவே, இந்தப் படங்கள் ஆஸ்ட்ரோவில் ஒளியேறியபோது பார்க்கத் தவறியவர்களும், தற்போது பார்க்க ஆர்வம் கொண்ட ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் தங்களின் விருப்பம்போல் ஆஸ்ட்ரோ வாயிலாக இந்தப் படங்களைப் பார்த்து மகிழலாம்.

தங்களின் இந்தப் புதிய முயற்சி குறித்து செல்லியல் இணைய ஊடகத்திற்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் விளக்கங்களை வழங்கியுள்ளார் ஆஸ்ட்ரோவின் இந்திய அலைவரிசைகளின் வணிகங்களுக்கான உதவித் தலைவர் மார்க் லூர்ட்ஸ்.

செல்லியலின் கேள்விகளுக்கு மின்னஞ்சல் பேட்டியின் வழி மார்க் லூர்ட்ஸ் வழங்கிய சில விளக்கங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்:

கேள்வி: தமிழ் மொழி தவிர்த்து மற்ற இந்திய மொழிகளில் தொலைக்காட்சிப் படங்களுக்கு ஆதரவு தரும் ஆஸ்ட்ரோவின் முயற்சிக்கு பின்னணிக் காரணங்கள் என்ன?

பதில் : ஏப்ரல் மாதம் என்பது மலேசியாவின் முக்கிய இந்திய சமூகங்களுக்கு முக்கியமான மாதமாகும். காரணம், கலாச்சார, மொழி ரீதியாக முக்கியமாகக் கருதப்படும் சித்திரைப் புத்தாண்டை தமிழர்கள் கொண்டாடுவதும், மலையாளிகள் விஷூ புத்தாண்டைக் கொண்டாடுவதும், தெலுங்கு சமுதாயத்தினர் உகாதிப் பெருநாளைக் கொண்டாடுவதும், நமது சீக்கிய சகோதர இனத்தினர் வைசாக்கி தினத்தைக் கொண்டாடுவதும் இந்த மாதத்தில்தான்!

நமது நாட்டின் மிகப் பிரபலமான இந்திய தொலைக்காட்சி அலைவரிசையான வானவில் எப்போதுமே உள்நாட்டு மக்களின் கலாச்சார உணர்வுகளையும், அம்சங்களையும் பிரதிபலிப்பதில் முன்னணியில் இருந்து வந்துள்ளது.

கடந்த ஓராண்டில் உள்நாட்டு உள்ளடக்கங்களை ஒளியேற்றுவதிலும் உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிப்பதிலும் உள்நாட்டு சமூகங்களுக்கு கடப்பாட்டுடன் நாங்கள் மேலும் கூடுதலாக பங்களிப்பை வழங்கியுள்ளோம்.

அந்த வகையில் இந்த மொழி வாரி தொலைக்காட்சிப் படங்களை முதன் முறையாக ஒளியேற்றுவது என்பது எங்களின் தொடர்ந்த உள்ளடக்க மேம்பாடுகளின் குறியீடாகும் என்பதோடு மலேசிய இந்திய சமுதாயத்தின் பன்முகத் தன்மையையும், அழகான பலவிதமான கலாச்சார அடுக்குகளையும் எடுத்துக் காட்டும் ஒரு முன்னெடுப்பாகும்.

கேள்வி : தமிழ் தவிர்த்து மற்ற இந்திய மொழித் தொலைக் காட்சிப் படங்களை ஒளியேற்ற ஆதரவு தருவதில் ஆஸ்ட்ரோவின் முதல் முயற்சியா இது?

பதில் : ஆம்! தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி ஆகிய இந்திய மொழிகளில் முதன் முறையாக உள்நாட்டிலேயே தொலைக் காட்சிப் படங்களை தயாரித்து ஒளியேற்றுவதில் ஆஸ்ட்ரோவின் முதல் முயற்சி இதுவாகும்.

கேள்வி : முதல் முயற்சியாக இந்த மற்ற இந்திய மொழிப் படங்களைத் தயாரித்து ஒளியேற்றுவதில் ஆஸ்ட்ரோ சந்தித்த சவால்கள் என்ன?

பதில் : படத்தில் பேசப்படும் மொழியின் உரையாடல் சரியாக இருப்பதையும், எதுவும் தவறாக உச்சரிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதையும் கவனமாக உறுதி செய்வதுதான் எங்களுக்கிருந்த மிகப் பெரிய சவால். தயாரிப்புக் குழுவினர் இதற்காக அந்தந்த மொழியில் நிபுணத்துவம் பெற்றவர்களை படப்பிடிப்புகள் நடக்கும்போது அருகில் வைத்துக் கொண்டுதான் படப்பிடிப்பை நடத்தினார்கள்.

படங்களின் கதைகளும், திரைக்கதை அம்சங்களும் அந்தந்த இனத்தினரின் கலாச்சார அம்சங்களையும், மதிப்பையும் சரியாகப் பிரதிபலிப்பதையும் நாங்கள் உறுதி செய்ய வேண்டியதிருந்தது.

கேள்வி : இதைப் போன்ற மேலும் அதிகமான முயற்சிகளை ஆஸ்ட்ரோவில் இருந்து எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாமா?

பதில் : எங்களுக்குக் கிடைத்த வரவேற்பை வைத்துப் பார்க்கும்போது இந்திய சமூகத்தின் மொழி வாரி இனங்கள் எங்களின் இந்த தொலைக் காட்சிப் படங்களை பார்ப்பதில் உற்சாகத்தையும் மிகுந்த எதிர்பார்ப்பையும் அடைந்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து வலுவான ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த தொலைக் காட்சிப் படங்களுக்கு மட்டுமின்றி இந்த ஆண்டிலும் தொடர்ந்து வரும் காலங்களிலும் நாங்கள் வரிசையாக ஒளியேற்றத் திட்டமிட்டிருக்கும் பலவகையான புதிய தொலைக் காட்சி நிகழ்ச்சிகளுக்கும் அவர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இதைப் போன்று மேலும் அதிகமான இந்திய மொழி நிகழ்ச்சிகளை ஒளியேற்ற நாங்கள் கடப்பாட்டையும் உறுதியையும் கொண்டிருக்கிறோம். எனினும் எங்களின் அத்தகைய முயற்சிகளுக்கும் நாங்கள் அடையக் கூடிய வெற்றிகளுக்கும் மக்களின் ஆதரவு மிகவும் முக்கியமாகும். எதிர்காலத்தில் நாங்கள் பலதரப்பட்ட உள்ளடக்கங்களை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு இந்திய சமுதாயத்தின் தொடர்ந்த ஆதரவை நாங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம்.

கேள்வி : இந்த மொழிவாரி இந்தியத் தொலைக் காட்சிப் படங்கள் குறித்து மேலும் எதுவும் கூற விரும்புகிறீர்களா?

பதில் : முதல் கட்டமாக புத்தாண்டு தினங்களைக் கொண்டாடி மகிழ்ந்த அனைத்து இந்தியர்களுக்கும் எங்களின் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களின் மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும், வளப்பத்திற்கும் ஆஸ்ட்ரோ வாயிலாக எங்களின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாடு முழுமையிலும் கொவிட்-19 பாதிப்புகளின் சூழ்நிலைக்கு மத்தியில் நீங்கள் வீட்டிலேயே பாதுகாப்புடன் தங்கியிருக்க, வேண்டிய தக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வீர்கள் என்றும் நம்புகிறோம். இந்த சிரமமான சூழ்நிலையை நாம் அனைவரும் இணைந்து கடந்து வர முடியும் என்றும் நம்புகிறோம். இந்த காலகட்டத்தில் உங்களுக்காக நாங்கள் வரிசைப்படுத்தி வைத்திருக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உங்களை உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் வைத்திருக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.