புதுடெல்லி, ஏப்ரல் 11- மூன்று நாள் பயணமாக ஜெர்மன் நாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் சென்றுள்ளார்.
இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலை ஜெர்மன் தலைநகர் பெர்லின் சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு 3 நாள்கள் தங்கியிருக்கும் பிரதமர், அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடன் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கவுள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது. முன்னதாக, பிரதமர் மன்மோகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:-
இந்தியாவின் வளர்ச்சியை மீண்டும் 8 சதவீதத்துக்கு கொண்டு வரும் வகையில், முதலீடுகளை அதிகரிக்க முயற்சிக்கப்படும். ஜெர்மனியுடன் வர்த்தகத்தை மேம்படுத்தவும், அதிக முதலீடுகளை பெறுவதற்கும் அந்நாட்டு பிரதமருடன் விவாதிக்கவுள்ளேன்.
இது தொடர்பாக, பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே விரிவான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்த, ஜெர்மன் பிரதமரின் ஆதரவை கோரவுள்ளேன். அதே போல், ஐரோப்பிய நாடுகளில் இந்திய முதலீட்டாளர்களுக்கும், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் அதிக வாய்ப்பை பெறுவது குறித்தும் ஆலோசிக்கவுள்ளேன்.
அடிப்படை கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் கூட்டு சேருவது குறித்து விவாதிக்கப்படும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் கொண்டு வருதல் மற்றும் ஆப்கனிஸ்தான், ஆசிய பசிபிக் பிராந்திய பிரச்னைகள் குறித்து ஜெர்மன் பிரதமருடன் விவாதிக்கப்படும். இவ்வாறு மன்மோகன் சிங் கூறியுள்ளார். பிரதமர் பயணத்தால், வர்த்தகம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.