சென்னை – ஏப்ரல் மாதத்தில் வெளியாகவிருந்த விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படத்தின் வெளியீடு கொவிட்-19 பிரச்சனையால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தப் படம் எப்போது வெளிவரும் என்பது இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
காரணம், திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது இதுவரையில் அரசாங்கத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஆனால் இந்த காலதாமதம் “மாஸ்டர்” படத்திற்கு இன்னொரு மிகப் பெரிய பலனைக் கொண்டு வந்திருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த காலதாமதத்தைப் பயன்படுத்தி “மாஸ்டர்” படத்தின் மொழிமாற்று (டப்பிங்) வேலைகள் மிகத் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், முன்பு தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் மட்டும் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த “மாஸ்டர்” படம் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகவிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து 5 மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகவிருக்கும் விஜய்யின் முதல் படமாக “மாஸ்டர்” திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மாஸ்டர் படத்தின் இந்தியா முழுமைக்குமான திரையீட்டை முன்னிட்டுத்தான் விஜய்யும் கொவிட்-19 தொடர்பான தனது நன்கொடைகளையும் பிரதமர் நிவாரண நிதி உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்களின் நிவாரண நிதிகளுக்காக அளித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, விஜய்யின் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன என்றாலும், கன்னடம் பேசப்படும் கர்நாடக மாநிலத்திலும், மலையாளம் பேசப்படும் கேரளாவிலும் தமிழிலேயே அவரது படங்கள் வெளியாகி வந்தன.
தற்போது மாஸ்டர் படத்தின் மூலம் மொழிமாற்றம் செய்யப்பட்டு (டப்பிங்) கன்னடம், மலையாளம் மொழிகளில் விஜய் படங்கள் வெளியிடப்படும் நடைமுறை தொடங்கப்பட்டிருக்கிறது.