Home இந்தியா நிறைகுடம் போன்ற தமிழ்ப் பெட்டகம் டாக்டர் மு.வ.

நிறைகுடம் போன்ற தமிழ்ப் பெட்டகம் டாக்டர் மு.வ.

1272
0
SHARE
Ad

(நவீனத் தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத பெயர் மு.வரதராசனார். தனது நாவல்களின் மூலமும் திருக்குறளுக்கு வழங்கிய பொருளுரையின் வாயிலாகவும் இன்னும் தமிழ் மக்களின் மனங்களிலும், இலக்கிய ஆர்வலர்களின் எண்ணங்களிலும் குடி கொண்டிருப்பவர். அன்னாரின் பிறந்த நாள் ஏப்ரல் 25. அதனை முன்னிட்டு மலேசிய எழுத்தாளர் நக்கீரன் எழுதிய இந்தக் கட்டுரை செல்லியலில் இடம் பெறுகிறது)

நிறைகுடம் ததும்பாது என்பதற்கு சான்றாக வாழ்ந்த தமிழ்க்கோமான், இலக்கியப் பெட்டகம் டாக்டர் மு.வரதராசனாருக்கு (படம்) நேற்று ஏப்ரல் 25-ஆம் தேதிதான் பிறந்த நாள்.

பன்முக ஆற்றல் வாய்க்கப்பெற்ற மனிதநேயர்; வாழ்ந்த காலத்தில் எப்போதும் மாணவ சமுதாயத்தின் நலம் நாடிய  நல்லாசிரியர்; மாற்றாரின் கருத்திற்கும் தன்மைக்கும் மதிப்பளித்த பண்பாளர்; இலக்கியவாணர்; பேராசிரியர், தமிழ்த் துறை தலைவர், துணை வேந்தர் என்றெல்லாம் பெருமைமிக வாழ்ந்த இவர், தமிழ்ச் சமுதாயத்தில் ‘மு, வ.’ இரு உயிர்மெய் எழுத்துக்களால் அறியப்படுபவர்.

#TamilSchoolmychoice

தந்தை முனுசாமியால் திருவேங்கடம் என்று பெயர் சூட்டப்பட்ட இவர், தந்தைவழி தாத்தாவின் பெயரான வரதராசன் என்னும் பெயராலும் குடும்ப அளவில் செல்லமாக அழைக்கப்பட்டார். காலவோட்டத்தில் அப்பெயரே நிலைத்துவிட்டது.

தமிழ் வித்துவான் பட்டம் பெற்ற முவ, தான் கற்றக் கல்விச்சாலைகள் அத்தனையிலும் முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார். 1939 முதல் 1961 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதலில் விரிவுரையாளராகவும் பின்னர், 1945-ம் ஆண்டு முதல் அக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணிபுரிந்து அந்தப் பணிக்குப் பொருத்தமான அடையாளமாகத் திகழ்ந்தார்.

தான் வகித்த பதவிக்குப் பெருமை சேர்க்கும் விதமாக நடந்து கொண்ட மு.வரதராசனார், 1948-ம் ஆண்டில் மட்டும், தன்னுடைய முனைவர் பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக, சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

பச்சையப்பன் கல்லூரியின் ‘கீழ்த்திசை மொழி விரிவுரையாளர்’ என்ற பொறுப்பை ஏற்ற இவர், 1944-ல் ‘தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு எம்.ஓ.எல். பட்டம் பெற்றார்.

இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றி பல சிறுகதைகள், புதினங்களையும் மு.வ படைத்துள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றிய பெருமை அவருக்கு உண்டு. பணியில் இருந்த சமயங்களில் மாணவர்கள் மற்றும் மக்களின் மனம் கவர்ந்த நல்லாசிரியராகவும் பண்பாளராகவும் விளங்கினார்.

20-ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற, புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்த மு.வ-வின் தமிழ்த் தொண்டை அனைவரும் அறிவர்.

1948-ல் சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதன் முதலில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் மு.வரதராசனார் என்பது அவருக்குக் கிடைத்த மணிமகுடம் ஆகும். 1971-ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்று, 1974-ம் ஆண்டுவரை சிறப்புறப் பணியாற்றினார். இவர் துணைவேந்தராகப் பணியாற்றிய காலத்தில் தமிழ் உட்பட பல்வேறு ஆராய்ச்சித் துறைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டன.

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து, பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளின் கல்வித்துறை தொடர்பான ஆய்வு மாநாடுகளில் பங்குபெற்ற பெருமைக்குரியவர். பல்வேறு விருதுகளைப் பெற்றிருந்தாலும் மானுட நேயம் ஒன்றே தனக்கான மிகச்சிறந்த அடையாளம் என்பதில் உறுதியாகத் திகழ்ந்தவர் மு.வரதராசனார். பிறரால் போற்றப்படக்கூடிய அளவுக்கு வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்தவர் மு.வ.

63 ஆண்டுகள் வாழ்ந்து 1974 அக்டோபர் 10-ஆம் நாள் மறைந்த இத்தமிழ் மேதை 1912-ஆம் ஆண்டில் ஏப்ரல் 25-ஆம் தேதி பிறந்தவராவார்.

-நக்கீரன்