புத்ரா ஜெயா – இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) நண்பகல் வரை மலேசியாவில் 38 புதிய பாதிப்புகளே அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,780 ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில்100 பேர்கள் கொவிட்-19 பாதிப்பிலிருந்து விடுபட்டு, இல்லம் திரும்பியிருக்கின்றனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,862 ஆக உயர்ந்திருக்கிறது.
இந்தத் தகவல்களை வெளியிட்ட சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கடந்த 24 மணி நேரத்தில் யாரும் மரணமடையவில்லை என்ற ஆறுதலான செய்தியையும் வெளியிட்டிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக இருந்து வருகிறது.
தற்போது நாடு முழுமையிலும் 1,820 பேர்கள் மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 36 பேர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. 15 பேர்கள் சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.