கோலாலம்பூர் – கடந்த சில மாதங்களில் நமது செல்லியல் பன்மொழி மின் ஊடகத்தை ஆண்டிராய்டு, ஐபோன் குறுஞ்செயலி வழியாகவும், இணையதளம் வழியாகவும், முகநூல், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களின் மூலமாகவும் அணுகி தகவல்களைத் தெரிந்து கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வந்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமுலாக்கம் தொடங்கியது முதல் கொவிட்-19 தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இல்லங்களில் முடங்கிக் கிடப்பதால் கிடைத்த கூடுதல் நேர அவகாசத்தால் செல்லியலை பல முனைகளில் இருந்தும் படிப்பவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென கடந்த சிலவாரங்களில் உயர்ந்தது.
புதிய வாசகர்கள் அதிக அளவில் இணைந்து கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர். ஏற்கனவே செல்லியல் செயலியைப் பதிவிறக்கம் செய்தவர்கள் அதிக அளவில் தொடர்பு கொண்டு செய்திகளைப் படிக்கத்தொடங்கியிருக்கின்றனர். இவர்களோடு வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் கொவிட்-19 தொடர்பான செய்திகளைத் தெரிந்து கொள்ள அதிக அளவில் செல்லியல் தளங்களில் இணைந்தனர்.
சுமார் 30-க்கும் மேற்பட்ட அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் மின் ஊடகத் தளமாகவும் செல்லியல் குறுஞ்செயலி பயன்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் நமது வாசகர்கள் அறிந்ததுதான்!
விரைவாக அதிகரித்த செல்லியல் பயனர்களின் எண்ணிக்கை
இதனால் பயனர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால் செல்லியலுக்குப் பின்புலமாக இயங்கும் தொழில்நுட்பத் தளங்களிலும் நெருக்கடிகளும் தொழில் நுட்ப சிக்கல்களும் எழுந்தன.
அதன்காரணமாகவே, சில நாட்களில் செல்லியல் வாசகர்களுக்கு உடனுக்குடன் சரியான முறையில் தொடர்புகள் கிடைக்காத நிலைமை ஏற்பட்டது. அதற்காக இந்த வேளையில் எங்களின் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எனினும் தொழில்நுட்ப சிக்கல்களை அடையாளம் கண்டு தீர்வு காண தீவிரமாக ஈடுபட்ட எங்களின் தொழில்நுட்பக் குழுவினர் செல்லியல் தளத்தை ஒருபுறத்தில் இயங்கச் செய்து கொண்டே, பின்னணியில் அதன் சிக்கல்களை தீர்க்கும் சவாலையும் எதிர்கொண்டனர்.
தற்போது முக்கிய சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டு, செல்லியல் சுமுகமான முறையில் இயங்கி வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தக் காலகட்டத்தில் ஐபோனிலும் ஆண்டிராய்டு கருவிகளிலும் இயங்கும் எங்களின் குறுஞ்செய்திகள், புதிய இயங்குதளங்களான ஐஓஎசின் 13-ஆம் பதிப்பிலும் ஆண்டிராய்டின் 10-ஆம் பதிப்பிலும் சிக்கலின்றி இயங்க அவற்றை மேம்படுத்தியுள்ளோம்.
திறன்கருவிகளின் இயங்குதளங்கள் (operating system) மேம்படுத்தப்படும்போது, அந்தந்தக் கருவிகளில் இயங்கும் செல்லியல் போன்ற குறுஞ்செயலிகளின் தரத்தையும், தொழில்நுட்ப உள்ளடக்கத்தையும் மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்பதை தொழில்நுட்பம் அறிந்த வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
ஐபோன், ஆண்டிரோய்டு இரு தளங்களிலும் உள்ள செல்லியல் குறுஞ்செயலிகளை நாங்கள் மேம்படுத்தி அவை இன்று (ஏப்ரல் 27) முதல் பயனர்கள் சுலபமாக பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி வடிவமைத்திருக்கிறோம்.
உலகம் எங்கும் உள்ள தமிழர்களுக்குச் செய்திகளை உடனுக்குடன் –அதிநவீனத் தொழில்நுட்பத்தில் – இலவசமாகவே வழங்கி வருகிறது செல்லியல். இத்தகைய உன்னத நோக்கங்களுடன் பாடுபட்டுக் கொண்டிருந்தாலும், விரிந்த வணிகப் பரப்பும் வருமானக் கட்டமைப்பும் இல்லாத செல்லியல் போன்ற சிறிய நிறுவனம், தொடர்ந்து தொழில்நுட்பக் கட்டமைப்பை மேம்படுத்திக் கொண்டே இருப்பது என்பது சவாலானதாகும்.
தரம் வாய்ந்த செய்திகளை உடனுக்குடனும் நவீனத் தொழில்நுட்பத் தளங்களின் வாயிலாகவும் தமிழ், ஆங்கிலம், மலாய் மொழிகளில் வழங்கும் தூரநோக்கு இலக்கோடு சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்னர் 2012-இல் தொடங்கப்பட்டது செல்லியல்
இந்த இலக்கைத் தொடர்ந்து நிலைநிறுத்த நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம். எந்தவித தனியார், வெளியிட நிதி உதவிகள் இன்றி முழுக்க முழுக்க எங்களின் சொந்த ஆர்வத்தோடும், செலவினத்தோடும் எங்களின் இலக்கை நோக்கி நாங்கள் இத்தனை ஆண்டுகளாக வெற்றிகரமாகப் பயணம் செய்து வந்துள்ளோம். அனைத்து அம்சங்களிலும் எங்களிடம் இருக்கும் சிறந்த மனித ஆற்றலின் உதவியோடு இந்தப் பயணத்தை இதுவரையில் நாங்கள் வெற்றிகரமாக கடந்து வந்திருக்கிறோம்.
எங்களின் இந்தப் பணி தடையின்றி தொடரும். மேலும் பல புத்தாக்க தொழில்நுட்ப அம்சங்க செல்லியல் தளத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
செல்லியல் குறுஞ்செயலிக்கான புதிய வசதிகளைப் பதிவிறக்கம் செய்யவும், ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள் அதனை மேம்படுத்திக் கொள்ளவும் சிக்கல்கள் எதையும் எதிர்நோக்கினால் கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரியில் நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்: