மும்பை: பாலிவுட் மூத்த நடிகர், ரிஷி கபூர் மும்பை மருத்துவமனையில் இன்று வியாழக்கிழமை தமது 67-வது வயதில் காலமானார்.
முன்னதாக, நேற்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மூத்த சகோதரர் ரந்தீர் கபூர் தெரிவித்திருந்தார்.
பாபி திரைப்படப் புகழ், 67 வயதான அந்நடிகர் நேற்று புதன்கிழமை காலை அவரது குடும்பத்தினரால் எச்என் ரிலையன்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
“அவர் மருத்துவமனையில் இருக்கிறார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சு விடுவதில் சிக்கல் உள்ளது. எனவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இப்போது சீரான நிலையில் உள்ளார்” என்று ரந்தீர் கபூர் தெரிவித்திருந்தார்.
தற்போரு, அவரின் மரணச் செய்தியைக் கேட்டு இரசிகர்கள், இந்திய திரைப்பட உலகமே அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
கிட்டத்தட்ட ஒரு வருடம் அமெரிக்காவில் புற்றுநோய்க்கு சிகிச்சைப்பெற்ற பின்னர் நடிகர் கடந்த செப்டம்பரில் இந்தியா திரும்பினார்.
பிப்ரவரியில், ரிஷி கபூர் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் முதலில் டில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஒரு குடும்ப விழாவில் கலந்து கொண்டார். அந்நேரத்தில், கபூர் தான் “தொற்றுநோயால்” பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மும்பைக்கு திரும்பிய பின்னர், மீண்டும் வைரஸ் காய்ச்சலுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் ரிஷி கபூர் ஏப்ரல் 2 முதல் தனது டுவிட்டர் கணக்கில் எதையும் வெளியிடவில்லை. அவர் சமீபத்தில் தனது அடுத்த திட்டத்தை அறிவித்திருந்தார். இது தீபிகா படுகோனுடன் ஹாலிவுட் திரைப்படமான “தி இன்டர்ன்” படத்தின் மொழிபெயர்ப்பாகும்.