Home வணிகம்/தொழில் நுட்பம் பொருளாதார வீழ்ச்சியா? யார் சொன்னது? 130 பில்லியனுடன் காத்திருக்கும் வாரன் பஃபெட்

பொருளாதார வீழ்ச்சியா? யார் சொன்னது? 130 பில்லியனுடன் காத்திருக்கும் வாரன் பஃபெட்

729
0
SHARE
Ad

நியூயார்க் – உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி என்ற பொருளாதார நிபுணர்களின் புலம்பல்கள். கொவிட்-19 பாதிப்புகளால் உலக நாடுகளின் நிதி நிலைமைகள் இறங்கு முகம் என்ற எச்சரிக்கைகள். இவற்றுக்கு நடுவில் எதற்கும் அசராமல், அடுத்த அதிரடித் தாக்குதலுக்காகக் காத்திருக்கிறார் வாரன் பஃபெட் (படம்).

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர். உலகின் முதல் நிலை முதலீட்டாளர். முதலீடுகளின் மூலமே செல்வச் செழிப்பின் உச்சத்தைத் தொட்டவர். அவர் தொட்டதெல்லாம் பொன்னாகும் என பல நிறுவனங்கள் அவர் முதலீடு செய்ய மாட்டாரா எனக் காத்திருக்கின்றன.

பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் காதலர் அவர். வழிகாட்டியும் அவரே! ஒரு நிறுவனத்தில் அவர் முதலீடு செய்கிறார் என்றால் ஏன், எதற்கு என்று கேட்காமல் அனைவரும் அவரைப் பின்பற்றி அதே நிறுவனத்தில் முதலீடு செய்வார்கள்.

#TamilSchoolmychoice

சரியான நேரத்தில், சரியான பங்கு விலையில் ஒரு நிறுவனத்தை வாங்குவது, அல்லது அதில் கணிசமாக முதலீடு செய்வது போன்ற வியூகங்களால் கோடிக்கணக்கான இலாபம் அடையும் நிறுவனமாக பெர்க்‌ஷையரை நடத்தி வருபவர் வாரன் பஃபெட். அந்நிறுவனத்தின் பெரும்பான்மை உரிமையாளர் என்ற முறையில் உலகின் பணக்காரர்களில் ஒருவராகவும் உயர்ந்தவர் அவர்.

அவரது பெர்க்‌‌ஷையர் ஹாத்வே (Berkshire Hathaway) முதலீட்டு நிறுவனம் ஆண்டுதோறும் மே மாதத்தில் தனது ஆண்டுக் கூட்டத்தை நடத்தும்போது அதன் தலைவராக வாரன் பஃபெட் உதிர்க்கும் கருத்துகள் என்ன என்பதைக் கேட்க அந்த பெர்க்‌ஷையரின் பங்குதாரர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள்.

ஆனால், இந்த முறை கொவிட்-19 பிரச்சனையால் பெர்க்‌ஷையர் ஆண்டுக் கூட்டம் இணையம் வழி நடத்தப்பட்டிருக்கிறது.

130 பில்லியன் டாலர்களை ரொக்கமாக வைத்திருக்கும் வாரன் பஃபெட்

சரி முக்கிய விஷயத்திற்கு வருவோம்! பெர்க்‌ஷையர் நிறுவனத்தில் நிதிக் கணக்கில் தற்போது 130 பில்லியன் டாலர்களுக்கும் மேற்பட்ட சேமிப்பு ரொக்கமாக வைக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க பங்குச் சந்தை தற்போது பொருளாதார வீழ்ச்சியாலும், கொவிட்-19 பாதிப்பாலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல நிறுவனங்களின் பங்குகள் அதன் உண்மையான மதிப்பை விட மிகக் குறைந்த விலையில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

இதன் காரணமாக, விரைவில் அமெரிக்க பங்குச் சந்தையில் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பெரிய அளவில் வாரன் பஃபெட் முதலீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய நிலையில் இவ்வளவு பெரிய ரொக்கக் கையிருப்பைக் கொண்டிருப்பவர் அவர் என்பதால் அவரை வணிக உலகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

2008 பொருளாதார மந்த நிலையின்போதும் இதுபோன்று நஷ்டத்தில் இயங்கிய பல நிறுவனங்களில் முதலீடு செய்தார் பஃபெட். சில வருடங்களில் அந்த நிறுவனங்களின் பங்கு விலைகள் அமோகமாக உயர்ந்து, பஃபெட்டுக்கும், அவருடன் இணைந்து முதலீடு செய்தவர்களுக்கும் கோடிக்கணக்கில் இலாபத்தை ஈட்டித் தந்தன.

இப்போதும் அவ்வாறே நடக்கும் என எதிர்பார்த்திருத்துக் காத்திருக்கிறது அமெரிக்க பங்குச் சந்தை உலகம்!