புதுடில்லி – நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமுலில் இருக்கும் காலத்திலேயே கொவிட்19 பாதிப்புகளின் எண்ணிக்கை இந்தியாவில் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை (மே 3) ஒரே நாளில் 83 பேர்கள் மரணமடைந்தனர். இதைத் தொடர்ந்து மொத்த மரண எண்ணிக்கை 1,373 ஆக உயர்ந்தது.
2,487 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 42,533 ஆக உயர்ந்திருக்கின்றன.
இதற்கிடையில் தமிழ் நாட்டில் மட்டும் மே 3-ஆம் தேதி வரையிலான ஒருநாளில் 266 பேர்களுக்கு கொவிட்19 தொற்று கண்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் தொற்று அடையாளம் காணப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்.
அதே வேளையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,379 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி ஒரு மரணமும் நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நகராக சென்னை திகழ்கிறது. இங்கு மட்டும் 1,458 பேர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் 17 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
அடுத்ததாக கோவை (146 பேர்கள்) திருப்பூர் (114 பேர்கள்) ஆகிய நகர்கள் அதிக பாதிப்புகளைக் கண்டுள்ளன.