Home One Line P1 எட்மண்ட் சந்தாரா பிகேஆர் கட்சியிலிருந்து விலகினாரா? விலக்கப்பட்டாரா?

எட்மண்ட் சந்தாரா பிகேஆர் கட்சியிலிருந்து விலகினாரா? விலக்கப்பட்டாரா?

911
0
SHARE
Ad
எட்மண்ட் சந்தாரா

கோலாலம்பூர் – சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா பிகேஆர் கட்சியிலிருந்து தானே விலகினாரா அல்லது விலக்கப்பட்டாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

தனது பிறந்த நாளான ஏப்ரல் 3-ஆம் தேதி தன்னைக் கட்சியிலிருந்து நீக்கியதற்காக அன்வார் இப்ராகிமுக்கு எட்மண்ட் சந்தாரா நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அஸ்மின் அலி அணியினரோடு பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறி மொகிதின் யாசின் அமைத்த புதிய பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் இணைந்த எட்மண்ட் சந்தாரா கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

எட்மண்ட் சந்தாராவுக்கு பதிலடி கொடுத்திருக்கும் பிகேஆர் கட்சியின் தொடர்புப் பிரிவு இயக்குநரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான பாஹ்மி பாட்சில் “நீங்கள் பிப்ரவரி 24-ஆம் தேதியே பிகேஆர் கட்சியிலிருந்து தாமாகவே வெளியேறி விட்டீர்கள். அதை அறிவித்ததன் மூலம் பிகேஆர் கட்சி சட்டவிதிகளின் படி நீங்கள்  உங்களின் உறுப்பியத்தை இயல்பாகவே இழந்து விட்டீர்கள்” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

“ஏப்ரல் 3-ஆம் தேதி உங்களுக்குக் கிடைத்த கடிதத்தின்படி நீங்கள் பிப்ரவரி 24-ஆம் தேதி கட்சியை விட்டு விலகி விட்டதை நினைவுபடுத்தித்தான் அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தோம்” என்றும் பாஹ்மி பாட்சில் (படம்) மேலும் தெரிவித்துள்ளார்.

பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறுவதாக ஓர் உறுப்பினர் அறிவித்தால் அவர் தனது உறுப்பியத்தை இயல்பாக அப்போதே இழந்து விடுவார் என அக்கட்சியின் சட்டவிதிகள் தெரிவிக்கின்றன.

பாஹ்மியின் டுவிட்டர் பதிவோடு பிப்ரவரி 24 தேதியிட்ட ஆஸ்ட்ரோ அவானியின் செய்திக் குறிப்பு ஒன்றையும் அவர் இணைத்துள்ளார்.

அந்த செய்தியின்படி அஸ்மின் அலி உள்ளிட்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு கட்சியிலிருந்து விலகி சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் செயல்படப் போவதாக எட்மண்ட் சந்தாரா தெரிவித்திருக்கிறார்.

அஸ்மின் அலி தலைமையிலான அந்தக் குழுவினர் தற்போது பெர்சாத்து கட்சியில் இணைந்துள்ளனர். மொகிதின் யாசினின் புதிய அரசாங்கத்திலும் இணைந்துள்ளனர்.

பெர்சாத்து கட்சியில் எட்மண்ட் சந்தாரா நேரடியாக இணைய முடியாது என்பதால் அவர் கெராக்கான் கட்சியில் இணையப் போவதாகவும் ஆரூடங்கள் எழுந்துள்ளன.