கோலாலம்பூர் – பிறப்பின் அடிப்படையாக விளங்கும் அன்னையே நம்மை வாழ வைக்கிறாள். அவளை வாழ்த்தி, பாராட்டுவதும், போற்றுவதும் ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும் என்று மனிவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இன்று கொண்டாடப்படும் அன்னையர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
“அன்னை என்பவளே எல்லாவற்றுக்கும் அடிப்படையாக விளங்குகிறார். குழந்தை பிறந்தவுடன் அன்னையாளவன் முதலில் தனது குழந்தையைப் பார்த்து அணைக்கும்போது ஒரு தெய்வீகத்தை உணர்கிறாள். அவள் உணர்ந்த அந்த தெய்வீகத்தினை உயிர் மூச்சாக எண்ணி, தான் வாழும் காலம்வரை, தனது பிள்ளைகளின் வாழ்வில் வழிகாட்டியாக இருந்து பிள்ளைகளையும், அவரைச் சார்ந்த குடும்பத்தினையயும் உயர்த்துகிறாள். பிள்ளைகள் தங்களுடைய வாழ்க்கையைப் படிப்படியாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நமது முன்னோர்கள் மாதா, பிதா, குரு என்பதனை வரிசைப்படுத்தி வைத்து, போற்ற வேண்டியவர்களில் அன்னைக்கு முதலிடம் கொடுத்து வைத்துள்ளனர். அன்னையைத் தாண்டித்தான் நாம் எதனையும் உணர்ந்து கொள்ள முடியும்” என்றும் சரவணன் தனது அன்னையர் தினச் செய்தியில் குறிப்பிட்டார்.
“அன்னையின்றி நாம் இந்த மண்ணிற்கு வந்திருக்க முடியாது. நமது பிறப்பிற்கு எது அடிப்படையாக இருந்திருக்கிறதோ, அதனை போற்றுவதும் – பாராட்டுவதும் மிகச் சிறந்த முதல் கடமையாகும். அந்த வகையில், தாயின் பெருமையைப் போற்றும் வகையில், மே 10-ஆம் நாளை அன்னையர் தினமாகக் கொண்டாடி மகிழும் இவ்வேளையில், பெற்ற தாய்மார்களுக்கும் மட்டுமின்றி, குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துவரும் அன்னையர் பெருமக்களுக்கும், சமூகநல இல்லங்களில் குழந்தைகளைப் பேணிக்காத்து வரும் அன்னையர்களுக்கும் எனது அன்னையர் தின நல்வாழ்த்துகளைக் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் மஇகாவின் தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.