மலாக்கா – இன்று திங்கட்கிழமை காலையில் தொடங்கிய மலாக்கா சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் 30 நிமிடங்களில் கூச்சல் குழப்பத்துடன் முடிவடைந்தது.
தேசிய முன்னணிக் கூட்டணி மலாக்காவைக் கைப்பற்றிய பின்னர் நடைபெறும் முதல் சட்டமன்றக் கூட்டம் இதுவாகும்.
காலை 9.30 மணிக்குத் தொடங்கிய கூட்டத்தை அவைத் தலைவர் ஓமார் ஜபார் நடத்த முற்பட்டபோது சுங்கை ஊடாங் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் இட்ரிஸ் ஹாரோன் எழுந்து அவைத் தலைவருக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லை எனக் கூறினார்.
அவைத் தலைவரை அகற்றும் தீர்மானம் ஒன்றும் முன்மொழியப்பட்டதாக அறியப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணி சார்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தேசியக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதங்கள் எழுந்தன.
ஒருவருக்கொருவர் உரத்த குரலில் வாக்குவாதங்களை நடத்தியதைத் தொடர்ந்து அவைத் தலைவர் சட்டமன்றக் கூட்டத்தை மற்றொரு தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இன்று காலை நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் அரசாங்க சார்பு ஊடகத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தனியார் ஊடகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த முடிவும் ஊடகத்தினரிடையே கடும் கண்டனங்களை எழுப்பியிருக்கிறது.