ஜோகூர் பாரு: ‘பிளவை ஏற்படுத்தும் கிருமியை’ பரப்ப வேண்டாம் என்று இன்று வியாழக்கிழமை ஜோகூர் மாநில சட்டமன்றத்திற்கு சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்காண்டார் அறிவுறுத்தினார்.
புதிய மாநில அரசாங்கக் கட்சி, தேசிய கூட்டணி மற்றும் நம்பிகைக் கூட்டணி இடையே ஒரு போட்டி ஏற்படக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் அவரது ஆலோசனை அமைந்துள்ளது.
“அரசியல் அல்லது தனிப்பட்ட நலன்களைத் தேடி பயணிக்க வேண்டிய நேரம் இதுவல்ல. ஏனெனில் இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தான கிருமிகளாகும். பிளவுபடுத்தும் தன்மை உள்ளவை” என்று சுல்தான் இப்ராகிம் கூறினார்.
முன்னதாக, மாநில சட்டமன்ற சபாநாயகர் சுஹைசான் கயாத்தை நீக்க தேசிய கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என்று வதந்தி பரவியது, அதே நேரத்தில் நம்பிக்கைக் கூட்டணி ஜோகூர் மந்திரி பெசார் ஹாஸ்னி முகமட் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்னெடுப்பதாக கூறப்பட்டது.
அரசியல் தலைவர்களிடையே இந்த பிளவு ஏற்கனவே பரவியுள்ளது என்று சுல்தான் இப்ராகிம் மேலும் கூறினார்.
“மக்களைப் பாதிக்கும் அமைதியின்மை மற்றும் அதிகாரப் போராட்டங்களுக்கு முகங்கொடுத்தால், நாட்டின் அரசியல் நிலைத்தன்மையையும், வளர்ச்சியையும் பாதிக்கும்.”
“இந்த எண்ணத்தில் இருப்பவர்கள் மக்கள் மறந்து விடுவார்கள், மக்களின் நலன்களை மறந்துவிடுவார்கள்.” என்று அவர் கூறினார்.