Home One Line P1 மே 18  நாடாளுமன்றம் – சட்டப்படி செல்லுமா? மொகிதின் ஏன் அச்சப்படுகிறார்?

மே 18  நாடாளுமன்றம் – சட்டப்படி செல்லுமா? மொகிதின் ஏன் அச்சப்படுகிறார்?

773
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மெல்ல மெல்ல கொவிட்19 விவாதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மலேசியர்களின் மனங்களை மே 18 என்ற தேதி ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறது.

ஒருநாள் நாடாளுமன்றம் என்றும் மாமன்னரின் தொடக்க உரையோடு கூட்டம் முடிந்து விடும் என்றும் முதலில் கூறப்பட்டது.

பின்னர் பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் சில மசோதாக்கள் பரிசீலிக்கப்படும் என்றார். ஆனால் இப்போதோ மீண்டும் மாமன்னர் உரையோடு ஒருநாள் நாடாளுமன்றம் முடிந்து விடும் என நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமட் அரிப் முகமட் யூசோப் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

முகமட் அரிப்புக்கு சட்ட நுணுக்கங்களையோ, நாடாளுமன்ற நடைமுறைகளையோ யாரும் விளக்க வேண்டியதில்லை. வழக்கறிஞர் மட்டுமல்ல, முன்னாள் மேல்முறையீட்டு நீதிபதியாகவும் இருந்தவர் அவர்.

மகாதீர் சமர்ப்பித்த மொதிதின் யாசின் மீதிலான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டவர் முகமது அரிப் (படம்).

ஆனால் நாடாளுமன்றக் கூட்டத்தின்போது அரசாங்கத்தின் விவகாரங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். எனவே, அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் போகலாம்.

நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும்போது அதை நடத்தும் முழு அதிகாரத்தையும் கொண்டவர் அவைத் தலைவர் ஒருவரே! எனவே, தப்பித் தவறி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அவர் விவாதத்துக்கு விட்டு விட்டால், வாக்கெடுப்பு நடத்தினால், அதனால் பல சிக்கல்கள் விளையக் கூடும்.

முதலாவதாக, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்தால் மொகிதினின் தேசியக் கூட்டணி அரசாங்கம் பெரும்பான்மை இழந்து கவிழக்கூடும்.

அல்லது, பெரும்பான்மையை மொகிதின் அரசாங்கம் பெற்றாலும் கூட எத்தனை இடங்கள் வித்தியாசத்தில் அவர்கள் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் முடிவுகள் காட்டிவிடும்.

தற்போது 222 நாடாளுமன்ற இடங்கள் உள்ளன. இதில் பெரும்பான்மையைப் பெற 111-க்கும் கூடுதலான இடங்கள் தேவை.

அப்படியே நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பில் மொகிதின் 115 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெறுகிறார் என வைத்துக் கொள்வோம்.

எதிர் கட்சியினர் 107 இடங்களைப் பெற்று தோல்வியடைகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அதன்பின்னர் வெறும் 4 இடங்கள் பெரும்பான்மையில்தான் மொகிதின் ஆட்சி தொடர்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகி விடும்.

அடுத்து வரும் மாதங்களில் அதையேதான் ஊடகங்களும் எழுதுவார்கள். அனைத்துலக நாடுகளும் அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளும்.

இதனால் மொகிதின் அரசாங்கம் வலுவுள்ள அரசாங்கமாக பார்க்கப்படாது. எந்த நேரத்திலும் கவிழக் கூடிய ஓர் அரசாங்கமாகவே அனைவராலும் பார்க்கப்படும்.

மற்ற மசோதாக்களும் தோல்வியடையலாம்

அப்படியே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மட்டும் ஒதுக்கி வைத்து விட்டு நாடாளுமன்றத்தை நடத்தினாலும் மொகிதினுக்கு மற்றொரு சிக்கல் காத்திருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு மசோதாவை அரசாங்கம் நாடாளுமன்றம் முன்வைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த மசோதாவை பெரும்பான்மை வாக்கெடுப்பில் எதிர்கட்சியினர் தோற்கடிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.

அப்படி ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டாலும், மொகிதின் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்பது பகிரங்கமாகி விடும்.

எனவேதான், மொகிதின் நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்துவதற்கு அஞ்சுகிறார்.

நாடாளுமன்றக் கூட்டத்தை மாமன்னர் உரை முடிந்தவுடன் கொவிட்19 காரணம் காட்டி ஒத்திவைத்து விட்டால் அடுத்த ஆறு மாதங்களுக்கு நாடாளுமன்றத்தை நடத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை.

எனவேதான் துணிந்து அப்புறம் என்ன நடக்கிறது என்பதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் – இப்போதைக்கு ஒருநாள் நாடாளுமன்றத்தை நடத்தி, ஆறுமாத காலத்திற்குள் நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்ற சட்டவிதியை பூர்த்தி செய்தால் போதும் என்ற முடிவுக்கு மொகிதின் வந்து விட்டார்.

ஒருநாள் நாடாளுமன்றம் சட்டபூர்வமானதா?

இப்போது எழுந்துள்ள அடுத்த கேள்வி ஒருநாள் நாடாளுமன்றம் சட்டப்படி செல்லுமா என்பதுதான்!

மலேசிய வரலாற்றில் இதற்கு முன் இப்படி நடந்ததில்லை.

மாமன்னரின் உரை முடிந்ததும் வேறு அலுவல்கள் நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டால், அது சட்டப்படியான நாடாளுமன்றக் கூட்டம் என்று அங்கீகரிக்கப்படுமா?

அதற்குரிய சட்ட ஆலோசனைகளையும் மொகிதின் கண்டிப்பாக பெற்றிருப்பார். சிக்கல்கள் இருந்தாலும் காலத்தைக் கடத்துவதற்காக இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

துன் மகாதீரோ இத்தகைய ஒருநாள் கூட்டம் சட்டபூர்வமானதல்ல என்று சாடியிருக்கிறார்.

“நாடாளுமன்றக் கூட்டம் என்பது என்ன? மாமன்னரின் உரையைக் கேட்பது மட்டும்தானா?” என மகாதீர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மே 18 நாடாளுமன்றக் கூட்டம் முடிந்ததும் அந்தக் கூட்டம் சட்டப்படி செல்லுமா என கூட்டரசு நீதிமன்றத்தில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் வழக்கு தொடுக்கப்படலாம்.

மே 18 ஒருநாள் கூட்டம் செல்லபடியாகாது என்ற தீர்ப்பை கூட்டரசு நீதிமன்றம் வழங்கினால், இயல்பாகவே மொகிதின் அரசாங்கம் கவிழக் கூடிய அபாயம் ஏற்படும்.

ஒருநாள் நாடாளுமன்றம் சட்டபூர்வமானதா என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

அத்தகைய ஓர் கூட்டத்தை நடத்துவதன் மூலம் தனக்கு நாடாளுமன்றப் பெரும்பான்மை இல்லை என்பதை மறைமுகமாகக் காட்டியிருக்கிறார் மொகிதின்.

அப்படியே பெரும்பான்மை இருந்தாலும், அதை நிரூபிக்க மொகிதின் அஞ்சுகிறார் என்பது போன்ற தோற்றமும் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

மொகிதின் ஜனநாயக மரபுகளை மீறுகிறார் என்ற கண்டனத்தையும் அவர் மீது நன்மதிப்பு கொண்ட அபிமானிகளிடையே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

கொவிட்19 விவகாரத்தைக் கையாள்வதிலும், மக்களுக்கு நலத் திட்டங்களை வழங்குவதிலும் மொகிதின் மக்களிடையே நன்மதிப்பையும், அபிமானத்தையும் பெற்றார் என்றே வைத்துக் கொண்டாலும்,

அதில் கணிசமான ஒரு பகுதியை மே 18 ஒரு நாள் நாடாளுமன்றக் கூட்டத்தின் மூலம் இழந்திருக்கிறார் என்றே கருதப்படுகிறது.

-இரா.முத்தரசன்