புத்ரா ஜெயா: இன்று சனிக்கிழமை (மே 16) நண்பகல் வரை மலேசியாவில் 17 புதிய சம்பவங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நாட்டில் 6,872-ஆக உயர்ந்திருக்கிறது.
17 புதிய பாதிப்புகளில் 6 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களாவர். இந்த 6 பேரில் 5 பேர் வெளிநாட்டினர் ஆவர். எஞ்சிய 11 பேர் உள்நாட்டிலேயே தொற்று கண்டவர்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கொவிட் பாதிப்பிலிருந்து விடுபட்டு, இல்லம் திரும்பியிருக்கின்றனர். கொவிட்19 தொற்று தொடங்கியது முதல் இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,512-ஆக உயர்ந்திருக்கிறது என்றும் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா (படம்) தெரிவித்தார்.
தற்போது நாடு முழுமையிலும் 1,247 பேர் மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 13 பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. 5 பேர் சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் மரணமடைந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.