ஈப்போ, ஏப்ரல் 12- ‘இண்டர்லோக்’ நாவலை தடைச் செய்யக்கோரி சட்டத்திற்கு புறம்பாக கூடியதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு ஹிண்ட்ராப் இயக்க வாதிகளை நேற்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விடுதலை செய்தது.
கடந்த 2010ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காலை 9 மணியளவில் ஜாலான் ஜெலப்பாங்கில் சட்டத்திற்கு புறம்பாக கூடியதற்காக பி.ரமேஷ் (வயது 40), ஜே.ஜெயலிங்கம் (வயது 49), என். சுப்ரமணியம் (வயது 42), எஸ். ஜெயகுமார் (வயது 48), ஆர். மோகன் (வயது 43) மற்றும் சிவகுமார் (வயது 38) ஆகியோர் போலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் தடை செய்யப்பட்ட ஹிண்ட்ராப் இயக்கத்தின் பெயரில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டதற்காக சட்டப்பிரிவு 43 ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால் அதனை எதிர்த்து, அவர்கள் 6 பேரும் மேல்முறையீடு கோரியிருந்தனர்.
எனவே இவ்வழக்கு, நேற்று ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிபதி சுஹாய்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது,
“குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இந்த 6 பேரின் மீதான வழக்கை டிபிபி திரும்ப பெற்றுக் கொண்டதால், இக்குற்றச்சாட்டிலிருந்து இவர்களை விடுதலை செய்கிறேன்” என்று தீர்ப்பு கூறினார்.
குற்றஞ்சாட்டப்பட்ட அந்த ஆறு பேர் சார்பாக வழக்கறிஞர் அந்தோனி அகஸ்தியன் ஆஜரானார்.
‘இண்டர்லோக்’ நாவல் அப்துல்லா உசேன் அவர்களால் மலேசிய வரலாற்றின் ஒரு பகுதியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு நாவலாகும். இந்த நாவலில் சர்ச்சைக்குள்ளான “பறையன்” எனும் சொல் மலேசியாவில் சாதிய அடையாளங்களை மக்களிடையே ஏற்படுத்தியதால், கடுமையான எதிர்ப்புகளுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.