புதுடில்லி – அயல்நாடுகளில் கொவிட்-19 பாதிப்புகளால் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்களை மீட்டுக் கொண்டுவரும் திட்டத்தை இந்திய அரசாங்கம் தொடங்கியுள்ளது. “வந்தே பாரத்” என்பது இந்த திட்டத்தின் பெயர்.
இதற்காக, புதுடில்லியிலிருந்து ஏர்-இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு மாஸ்கோ சென்றது. மாஸ்கோவிலுள்ள இந்தியர்களை ஏற்றிவரச் செல்வதால் காலியாகவே இந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.
புதிய விமான நிலைய நடைமுறைகளின்படி பயணத்தை செலுத்திய விமானிக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டு, அதன் பின்னரே அவர் விமானத்தை இயக்க அனுமதிக்கப்பட்டார்.
எனினும், விமானம் மாஸ்கோ நோக்கி வானில் பறந்து கொண்டிருந்த நிலையில் அந்த விமானியின் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி விமானிக்கு கொவிட்-19 பாதிப்பு இருந்தது உறுதியானது. விமானமும் உடனடியாக மீண்டும் புதுடில்லிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டது.
உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டின் மீது பறந்து கொண்டிருந்தபோது ஏர்-இந்தியா விமானம் மீண்டும் புதுடில்லிக்கே திரும்ப வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டது. அதன்படியே மீண்டும் புதுடில்லிக்கே திரும்பியது அந்த விமானம்.
கொவிட்-19 தொற்று பரவுதலைத் தொடர்ந்து கடந்த மார்ச் 23 முதல் இந்தியா வெளிநாட்டு விமானப் பயணங்களுக்குத் தடை விதித்தது.