கோலாலம்பூர்: பிப்ரவரியில் நடந்த அரசியல் நெருக்கடியின் போது துன் டாக்டர் மகாதீர் முகமட் ஒரு புதிய கூட்டணியின் கீழ் பிரதமராக இருக்க வேண்டும், ஆனால், நம்பிக்கைக் கூட்டணியுடன் அல்ல என்று அம்னோ விரும்பியதாக கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி கூறினார்.
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒற்றுமை அரசாங்கத்தை முன்மொழிந்தபோது, பிரதமராக இருந்த டாக்டர் மகாதீருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற கட்சி முடிவு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
பிப்ரவரி 23 அன்று நடந்ததாகக் கூறப்படும் ஒரு கூட்டத்தில், டாக்டர் மகாதீர் தேசிய கூட்டணி தலைவர்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று குறித்து சாஹிட் ஹமிடி விளக்கினார்.
“பரவலாகி வரும் படம் அந்தந்த கட்சித் தலைவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பைக் காட்டுகிறது. டாக்டர் மகாதீர் ஜசெக, பிகேஆர் மற்றும் அமானா கட்சி இல்லாமல் ஒரு அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று முன்மொழிந்தோம்.
“எங்கள் விவாதங்களைத் தொடங்குவதற்கான பொதுவான உடன்பாடு இதுதான்.
“இருப்பினும், டாக்டர் மகாதீர் பின்னர் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்க பரிந்துரைத்தபோது நாங்கள் எங்கள் ஆதரவை திரும்பப் பெற்றோம். இது எங்கள் முந்தைய ஒப்பந்தத்திற்கு எதிரானது.” என்று அவர் நேற்று தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
டாக்டர் மகாதீரிடம் நீதிமன்ற ஆவணங்களை, அவர் காண்பிப்பதாக கூறுவது தவறு என்றும், தாங்கள் சத்தியப்பிரமாணங்களைக் கொண்டு வந்ததாக அவர் கூறினார்.
“சிலரால் கூறப்பட்டது போல நீதிமன்ற ஆவணங்கள் அல்ல, சத்தியப்பிரமாணங்களைக் கொண்டுவரும் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.
“நான் அம்னோவின் உறுப்பினர்கள் மற்றும் தலைமையின் கட்டளையுடன் கூட்டத்தில் கலந்து கொண்டேன், அதற்கும் மேலாக இல்லை.” என்று சாஹிட் ஹமிடி கூறினார்.