கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணையின்போது பணப் பட்டுவாடா இயந்திரத்திலிருந்து பணம் எடுக்கும் நேரக் கட்டுபாட்டை இன்று முதல் அரசு நீக்கியுள்ளது.
வங்கிகளின் நடைமுறைகளின்படி பணப் பட்டுவாடா இயந்திர இயக்க நேரம் திங்கட்கிழமை முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
கொவிட் -19 தொற்று சங்கிலியை உடைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நேரம் விதிக்கப்பட்டிருந்தது.
“இருப்பினும், பணப் பட்டுவாடா இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் கூடல் இடைவெளி நெறிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.” என்று ஞாயிற்றுக்கிழமை தினசரி ஊடகச் சந்திப்பில் அவர் கூறினார்.
பணப் பட்டுவாடா இயந்திரங்களிருந்து பணத்தை எடுப்பதாக சாக்குப்போக்குக் கூறி பலர் இரவில் தாமதமாக வெளியே வந்ததை அடுத்து ஏப்ரல் 19- ஆம் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அரசாங்கம் பணம் எடுக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தியது.