புது டில்லி: இந்தியாவில் கொவிட்-19 தொற்றால் மூடப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் இம்மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க உள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா கிருமி வேண்டுமானால் கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருக்கலாம், ஆனால் மருத்துவத் துறை ஊழியர்கள் அழிக்க முடியாதவர்கள் என்று பெங்களூருவில் உள்ள ராஜிவ் காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் காணொளி அமர்வில் பேசியுள்ளார்.
இந்த போராட்டத்தில் மருத்துவ சமூகத்தின் கடும் உழைப்பு உள்ளது. அவர்களுக்கு எதிரான வன்முறை, வெறுப்பை உமிழும் பேச்சு உள்ளிட்டவையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 20- ஆம் தேதி முதலே இந்தியாவில், ஊரடங்கு உத்தரவுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு தரப்பு அறிவித்திருந்தது. ஊரடங்கு உத்தரவை இம்மாத இறுதி வரை மத்திய அரசு நீட்டித்திருந்தாலும், படிப்படியாக பொருளாதாரத்தை மீட்டெடுக்க மேலும் தளர்வுகள் குறித்து அரசு அறிவித்துள்ளது.
ஆயினும், ஒரு சிலர் இந்த தளர்வுகளினால்தான் இந்தியாவில் தற்போது அதிகபடியான தொற்று சம்பவங்கள் பதிவாகி வருவதாகக் குறை கூறி வருகின்றனர்.