கோலாலம்பூர்: சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு பதிலாக ஓர் அரசியல்வாதியை நியமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
நேற்று வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவில் ஊடகங்களுடன் பேசிய முன்னாள் பிரதமர், கொவிட்19 பாதிப்பு அச்சுறுத்தலுக்கு அரசாங்கத்தின் நடவடிக்கை வெற்றி கண்டுள்ளதன் காரணம் அது ஒரு நிபுணரின் தலைமையில் இருந்ததால் என்று அவர் தெரிவித்தார்.
“அரசாங்கம் தனது வேலையைச் சிறப்பாகச் செய்கிறது. அதனால்தான் அரசியல்வாதிகள் நிபுணத்துவ வேலைகளை ஏற்க முடியாது.
“இந்த வேலை ஒரு நிபுணத்துவம் வாய்ந்தது. ஒரு மருத்துவரால் செய்யப்பட்டது, அவர் சிறப்பாக செயல்பட்டார்.
“ஒரு கட்டத்தில் அவரை (நூர் ஹிஷாம்) ஓர் அரசியல்வாதியுடன் மாற்றுவதற்கு முயற்சி இருந்தது, ஏனெனில் அது அரசியல்வாதிக்கு ஒரு நல்ல விளம்பர நடவடிக்கையாக இருக்கும்.” என்று அவர் கூறினார்.
இருப்பினும், இந்த முயற்சிக்கு ஆட்சேபணை இருந்ததால் முயற்சி தோல்வியடைந்தது என்று மகாதீர் கூறினார்.
எனினும், துன் மகாதீரின் கூற்று யாரைக் குறிப்பிடுகிறது என்பது தெரியவில்லை.