புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய கொவிட்19 பாதிப்புகள் 7 மட்டுமே அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.
கொவிட்-19 பிரச்சனைகள் தொடங்கியதிலிருந்து மிகக் குறைந்த ஒருநாள் சம்பவ எண்ணிக்கை இதுவாகும்.
இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,329-ஆக உயர்ந்தது.
தனது அன்றாட பத்திரிகையாளர் சந்திப்பில் நூர் ஹிஷாம் இந்த விவரங்களை வெளியிட்டார்.
கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 பாதிப்பால் மரணங்கள் ஏதும் நிகழவில்லை. இதைத் தொடர்ந்து நாட்டின் மரண எண்ணிக்கை 117- ஆக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 7 பாதிப்புகளில், 2 சம்பவங்கள் வெளிநாட்டினர் உள்ளடக்கியதாகும். 5 பேர் உள்நாட்டில் தொற்று பீடிக்கப்பட்ட மலேசியர்களாவர்.
இன்று 20 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,694-ஆக உயர்ந்தது.
1,518 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒருவர் மட்டுமே சுவாசக் கருவி மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்.
உள்நாட்டில் பீடிக்கப்பட்ட தொற்று சம்பவங்களில் இருவர், சிப்பாங்கில் கொவிட்-19 பாதித்திருந்த நபர் ஒருவரிடம் நெருக்கமாக இருந்ததன் காரணமாக தொற்று கண்டவர்கள் ஆவர்.
எஞ்சிய மூவரில் ஒருவர் புக்கிட் ஜாலில் குடிநுழைவு முகாமில் பணியாற்றியவர் ஆவார். சபா, லிக்காசில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைப் பணியாளர் ஒருவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
கோத்தா கினபாலுவில் சமூகத்தினரிடையே நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று கண்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரும் இன்றைய 7 புதிய தொற்று கண்டவர்களில் ஒருவராவார்.
இதற்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) வெளியிடப்பட்ட சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி19 ஆக இருந்த புதிய சம்பவங்களின் எண்ணிக்கை இன்று 7 ஆக மட்டுமே குறைந்திருப்பது, பிரதமர் கூறியபடி மீட்சி நிலைக்கு நாடு திரும்புவதை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.