ஹாங்காங் – கொவிட்-19 பிரச்சனைகளால் உலகம் முழுவதும் பல விமான நிறுவனங்கள் இழப்புகளை எதிர்நோக்கி வருகின்றன. சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசாங்கங்களும் அந்நிறுவனங்களை மீட்பதற்கான நிதி ஒதுக்கீடுகளை அறிவித்து வருகின்றன.
ஹாங்காங் நாட்டின் அதிகாரபூர்வ விமான நிறுவனமான கத்தே பசிபிக்கின் மீட்சிக்கு 30 பில்லியன் ஹாங்காங் டாலர்கள்களை ஹாங்காங் அரசாங்கம் வழங்குகிறது.
39 பில்லியன் ஹாங்காங் டாலர்களைக் கொண்ட மீட்சித் திட்டத்தை கத்தே பசிபிக் செயல்படுத்தி வருகின்றது. இதில் பெரும்பகுதி தொகையை ஹாங்காங் அரசு வழங்குகிறது.
தங்களின் நிதி உதவிக்கு ஈடாக கத்தே பசிபிக் நிறுவனத்தில் 6.08 விழுக்காட்டு பங்குகளை ஹாங்காங் அரசு பெறும். எனினும் அந்நிறுவனத்தின் நிர்வாகத்தில் ஹாங்காங் தலையிடாது என்ற உறுதி மொழியும் வழங்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் ஹாங்காங் அரசு நேரடியாக ஒரு நிறுவனத்தில் நிதி முதலீட்டைச் செய்வது இதுவே முதன் முறையாகும்.
இந்த நிதி முதலீட்டின் மூலம் பெறப்பட்ட பங்குகளை அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஹாங்காங் அரசு வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொவிட்-19 பாதிப்புகளில் இருந்து கத்தே பசிபிக் நிறுவனத்தை மீட்பது மட்டுமே ஹாங்காங் அரசின் இந்த நிதி முதலீட்டுக்கான நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.