கோலாலம்பூர் : நம்பிக்கை கூட்டணி சார்பான புதிய பிரதமர் யார் என்பதை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) அறிவிக்க, தாங்கள் எண்ணம் கொண்டிருப்பதாக பாஹ்மி பாட்சில் அறிவித்திருக்கிறார்.
பாஹ்மி பிகேஆர் கட்சியின் தகவல் தொடர்பு இயக்குனரும் ஆவார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) முன்னாள் பிரதமர் துன் மகாதீர், அன்வார் இப்ராகிம் உள்ளிட்ட நம்பிக்கை கூட்டணித் தலைவர்கள் பிகேஆர் கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர்.
அந்த சந்திப்பைத் தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்தார் பாஹ்மி. “கடவுள் விருப்பமிருந்தால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை கூட்டணி சார்பிலான பிரதமர் யார் என்பதை நாங்கள் அறிவிப்போம்” என்று தெரிவித்திருக்கின்றார்.
பாஹ்மி பாட்சில் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.
நேற்று வெள்ளிக்கிழமை கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மன்றக் கூட்டமும் நடைபெற்றது. எனினும் அடுத்த நம்பிக்கைக் கூட்டணி பிரதமர் குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் பாஹ்மி தெரிவித்தார்.
நம்பிக்கை கூட்டணி இரண்டு வெவ்வேறு விதமான முடிவுகளை எடுக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்
முதலாவது முடிவு, அடுத்து அடுத்த சில மாதங்களுக்கு துன் மகாதீர் பிரதமராக நீடிப்பது, அவருக்கு துணைப் பிரதமராக அன்வார் இப்ராகிம் நியமிக்கப்படுவது என்பதாகும்.
இரண்டாவது முடிவு அன்வார் இப்ராகிம் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதாகும். மகாதீர் தரப்பினரின் ஆதரவைப் பெற அவரது மகன் முக்ரிஸ் மகாதீர் துணைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம்.
நம்பிக்கை கூட்டணியின் 90-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதமர் வேட்பாளராக அன்வார் இப்ராகிம் நிறுத்தப்படுவதையே விரும்புகின்றனர்.
பெர்சாத்து கட்சி இரண்டாக பிளவுபட்டு நிற்பதும், நீதிமன்ற சிக்கல்களில் சிக்கியிருப்பதும் துன் மகாதீருக்கு எதிராக நிற்கும் பாதக அம்சங்களாகும்.
வெறும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருப்பது மகாதீருக்கு இருக்கும் மற்றொரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
தங்கள் தரப்புக்கு ஆதரவு கோரி மகாதீர், அன்வார் இருவருமே ஜிபிஎஸ் (காபுங்கான் பார்ட்டி சரவாக்) எனப்படும் கட்சிகளின் கூட்டமைப்போடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த ஜிபிஎஸ் கூட்டணியின் ஆதரவோடுதான் நம்பிக்கை கூட்டணியின் அடுத்த ஆட்சி அமைக்கப்படும் என்ற ஆருடம் நிலவுகின்றது.
எனினும், ஜிபிஎஸ் தலைவர்கள் இந்தக் கூற்றைத் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.