Home One Line P2 அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக செயல்பட ஸ்ரீராமுக்கு  தகுதியில்லை –  நஜிப் நீதிமன்றத்தில் மனு

அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக செயல்பட ஸ்ரீராமுக்கு  தகுதியில்லை –  நஜிப் நீதிமன்றத்தில் மனு

651
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 1எம்டிபி தொடர்பில் அரசாங்கத் தலைமை கணக்காய்வாளரின் அறிக்கையை திருத்துவதற்காக தனது அதிகாரத்தை முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் பயன்படுத்தினார் என நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு எதிராக அரசாங்க தலைமை வழக்கறிஞராக முன்னாள் கூட்டரசு நீதிமன்றம் நீதிபதி கோபால் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஸ்ரீராம் அரசாங்கத் தலைமை வழக்கறிஞராகச் செயல்படுவதற்கான தகுதியை இழந்துவிட்டார் என்றும் அவரது நியமனத்தை இரத்து செய்ய வேண்டும் என்றும் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 12) கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நஜிப்  சார்பாக மனு செய்யப்பட்டுள்ளது.

அபாண்டி அலி வெளியிட்ட அதிர்ச்சி தரும் கருத்துகள்

“நஜிப் பிரதமராக இருந்த காலத்தில், ஜனவரி 2018 காலகட்டத்தில் முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம் ஒருமுறை என்னைச் சந்திக்க வந்தார்.துன் மகாதீரின் செய்தி ஒன்றைக் கொண்டு வந்திருப்பதாகக் கூறினார். நஜிப்பைக் கைது செய்யுமாறு உங்களை மகாதீர் கேட்டுக் கொண்டார் என்றும் ஸ்ரீராம் கூறினார்” என முன்னாள் சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அபாண்டி அலி கடந்த புதன்கிழமை (ஜூன் 10) தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

“நாளை நஜிப்பை பிற்பகல் 2.00 மணிக்கு அவரது அலுவலகத்திற்கு சென்று அவரைக் கைது செய்யுங்கள். புத்ரா ஜெயா காவல் நிலையில் தகுந்த ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம். உங்கள் உத்தரவுகளுக்கு ஏற்ப அவர்கள் செயல்படுவார்கள். அதன்பின்னர் நீங்கள் குற்றவியல் (மாஜிஸ்ட்ரேட்) நீதிமன்றத்தில் நஜிப்பைக் கொண்டுவரும்போது அவரை தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவையும் அந்த மாஜிஸ்ட்ரேட் வழங்குவார், என்றும் ஸ்ரீராம் என்னிடம் கூறினார்” என்றும் அபாண்டி அலி தனது பதிவில் தெரிவித்திருந்தார்.

“இப்படி நீங்கள் செய்தால் மக்களின் கண்களுக்கு நீங்கள் ஒரு ஹீரோ போல் தெரிவீர்கள். பதவியில் இருக்கும் ஒரு பிரதமரைக் கைது செய்த முதல் சட்டத் துறை தலைவராகவும் நீங்கள் திகழ்வீர்கள்” என்றும் ஸ்ரீராம் தன்னை வற்புறுத்தியதாக அபாண்டி அலி கூறியிருக்கிறார்.

“என்ன காரணங்களுக்காக நான் அவரைக் கைது செய்ய வேண்டும் என்று ஸ்ரீராமைக் கேட்டேன். சகோதரரே! காரணத்தை விட்டு விடுங்கள். மக்கள் அதிருப்தியோடும் வெறுப்போடும் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று ஸ்ரீராம் பதிலளித்தார்” என்றும் அபாண்டி அலி பதிவிட்டிருக்கிறார்.

இந்த சம்பவத்தை நிரூபிக்கும் வகையில் மறைக்காணி காணொளிக் காட்சிகளும் (சிசிடிவி) நேரில் பார்த்த சாட்சிகளும் இருப்பதாகவும் அபாண்டி அலி மேலும் குறிப்பிட்டார்.

அபாண்டி அலி தன்னைப் பற்றி வெளியிட்டிருக்கும் தகவல் குறித்து பதில் கூற வழக்கறிஞர் ஸ்ரீராம் மறுத்து விட்டார்.

ஸ்ரீராம் தகுதியிழக்கச் செய்யப்படுவாரா?

ஜூன் 2015-இல் அபாண்டி அலி சட்டத் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஜூன் 2018-இல் புதிய நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அவர் அந்தப் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.

2018 மே பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றிய மகாதீர் அதன் பின்னர் நஜிப்பைக் கைது செய்ததும் அவர் மீதான 1எம்டிபி வழக்குகள் தொடரப்பட்டதும் அனைவரும் அறிந்ததுதான்.

1எம்டிபி வழக்குகளில் நஜிப்புக்கு எதிரான அரசு தரப்பு வழக்கறிஞராக ஸ்ரீராம் நியமிக்கப்பட்டார். அந்த வழக்கை இலவசமாக வாதாடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அபாண்டி அலி வெளியிட்டிருக்கும் இந்தப் புதிய தகவல்களைத் தொடர்ந்து தனது 1எம்டிபி வழக்கில் ஸ்ரீராம் அரசு தரப்பு வழக்கறிஞராக செயல்படுவதற்கு அவருக்கு தகுதியில்லை என நஜிப் இந்த மனுவைச் செய்வதாக அவரது வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

தனது மனுவுக்கு ஆதரவாக இரண்டு சத்திய பிரமாண ஆவணங்களை நஜிப்  தாக்கல் செய்திருக்கின்றார் எனவும் அவரது வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா தெரிவித்தார்.

ஒரு சத்தியபிரமாணம் நஜிப் சமர்ப்பித்திருக்கிறார். மற்றொரு சத்தியப்பிரமாணம் முன்னாள் சட்டத்துறை தலைவர் அபாண்டி அலி சமர்ப்பித்திருக்கிறார்.

இந்த புதிய மனு தொடர்பான ஆவணங்கள் அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கும் சம்பந்தப்பட்டவர்களிடம் சமர்ப்பிக்கப் பட்டிருப்பதாக ஷாபி  அப்துல்லா கூறியிருக்கிறார்.

அடுத்த திங்கட்கிழமை நஜிப் மீதான வழக்கு தொடரவிருக்கும் நிலையில் அதற்கு முன்பாக தங்களின் மனுவை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் போவதாக ஷாபி அப்துல்லா நேற்று வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

நீதிபதி முகமட் சைனி மஸ்லான் முன்னிலையில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

1எம்டிபி மீதான கணக்கு அறிக்கையை அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளர் தயாரித்து நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்கு குழுவிடம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அதனை தனது அதிகாரத்தை பயன்படுத்தி நஜிப் திருத்தினார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

அந்தக் குற்றச்சாட்டில் அவருக்கு துணை புரிந்தார் என 1எம்டிபி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அருள் கந்தா கந்தசாமியும் குற்றம் சாட்டப்பட்டு இருக்கின்றார்.

இதுவரையில் இந்த வழக்கில் 7 சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருக்கின்றனர். முன்னாள் அரசாங்கத் தலைமை கணக்காய்வாளர் டான்ஸ்ரீ அம்ப்ரின் புவாங், மற்றும் முன்னாள் அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அலி ஹம்சா ஆகியோரும் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டிருக்கின்றனர்.