Home One Line P1 “கருத்து சொல்ல ஏதுமில்லை” அபாண்டி அலி கூற்றுக்கு ஸ்ரீராம் பதில்

“கருத்து சொல்ல ஏதுமில்லை” அபாண்டி அலி கூற்றுக்கு ஸ்ரீராம் பதில்

641
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை (ஜூன் 10) தனது முகநூல் பக்கத்தில் முன்னாள் சட்டத் துறைத் தலைவர் அபாண்டி அலி தன்னைப் பற்றி வெளியிட்டிருக்கும் தகவல் குறித்து பதில் கூற வழக்கறிஞர் ஸ்ரீராம் மறுத்து விட்டார்.

“நஜிப் பிரதமராக இருந்த காலத்தில், ஜனவரி 2018 காலகட்டத்தில் முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம் ஒருமுறை என்னைச் சந்திக்க வந்தார்.துன் மகாதீரின் செய்தி ஒன்றைக் கொண்டு வந்திருப்பதாகக் கூறினார். நஜிப்பைக் கைது செய்யுமாறு உங்களை மகாதீர் கேட்டுக் கொண்டார் என்றும் ஸ்ரீராம் கூறினார்” என அபாண்டி அலி அந்த முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.

“நாளை நஜிப்பை பிற்பகல் 2.00 மணிக்கு அவரது அலுவலகத்திற்கு சென்று அவரைக் கைது செய்யுங்கள். புத்ரா ஜெயா காவல் நிலையில் தகுந்த ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம். உங்கள் உத்தரவுகளுக்கு ஏற்ப அவர்கள் செயல்படுவார்கள். அதன்பின்னர் நீங்கள் குற்றவியல் (மாஜிஸ்ட்ரேட்) நீதிமன்றத்தில் நஜிப்பைக் கொண்டுவரும்போது அவரை தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவையும் அந்த மாஜிஸ்ட்ரேட் வழங்குவார், என்றும் ஸ்ரீராம் என்னிடம் கூறினார்” என்றும் முன்னாள் அரசாங்க சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அபாண்டி அலி தனது பதிவில் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

நஜிப்பின் வழக்குகள் உச்சகட்ட விசாரணையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்போது இத்தகையத் தகவல்கள் வெளியிடப்பட்டிருப்பது சட்டத்துறை வட்டாரங்களில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியிருக்கிறது.

“இப்படி நீங்கள் செய்தால் மக்களின் கண்களுக்கு நீங்கள் ஒரு ஹீரோ போல் தெரிவீர்கள். பதவியில் இருக்கும் ஒரு பிரதமரைக் கைது செய்த முதல் சட்டத் துறை தலைவராகவும் நீங்கள் திகழ்வீர்கள்” என்றும் ஸ்ரீராம் தன்னை வற்புறுத்தியதாக அபாண்டி அலி கூறியிருக்கிறார்.

“என்ன காரணங்களுக்காக நான் அவரைக் கைது செய்ய வேண்டும் என்று ஸ்ரீராமைக் கேட்டேன். சகோதரரே! காரணத்தை விட்டு விடுங்கள். மக்கள் அதிருப்தியோடும் வெறுப்போடும் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று ஸ்ரீராம் பதிலளித்தார்” என்றும் அபாண்டி அலி பதிவிட்டிருக்கிறார்.

இந்த சம்பவத்தை நிரூபிக்கும் வகையில் மறைக்காணி காணொளிக் காட்சிகளும் (சிசிடிவி) நேரில் பார்த்த சாட்சிகளும் இருப்பதாகவும் அபாண்டி அலி மேலும் குறிப்பிட்டார்.

ஜூன் 2015-இல் அபாண்டி அலி சட்டத் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஜூன் 2018-இல் புதிய நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அவர் அந்தப் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.

2018 மே பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றிய மகாதீர் அதன் பின்னர் நஜிப்பைக் கைது செய்ததும் அவர் மீதான வழக்குகள் தொடரப்பட்டதும் அனைவரும் அறிந்ததுதான்.

1எம்டிபி வழக்குகளில் நஜிப்புக்கு எதிரான அரசு தரப்பு வழக்கறிஞராக ஸ்ரீராம் நியமிக்கப்பட்டார். அந்த வழக்கை இலவசமாக வாதாடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அபாண்டி அலி வெளியிட்டிருக்கும் இந்தப் புதிய தகவல்களின் மூலம் நஜிப் மீதான 1எம்டிபி வழக்குகளில் தொய்வு ஏற்படுமா, புதிய சட்ட சிக்கல்கள் முளைக்குமா, என்பது போன்ற கேள்விகளும் தற்போது எழுந்திருக்கின்றன.