கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது இன்று அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பிசுபிசுத்தது. இன்று செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணி வரையில் அறிவிப்பு வெளிவராததைத் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணி ஆதரவாளர்களிடையே ஏமாற்றமும், அதிருப்திகளும் ஏற்பட்டிருப்பது தெரிகிறது.
கடந்த வாரத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என பிகேஆர் கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் பாஹ்மி பாட்சில் தெரிவித்திருந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) முன்னாள் பிரதமர் துன் மகாதீர், அன்வார் இப்ராகிம் உள்ளிட்ட நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் பிகேஆர் கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர்.
அந்த சந்திப்பைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 12) பத்திரிகையாளர்களை சந்தித்தார் பாஹ்மி. “கடவுள் விருப்பமிருந்தால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நம்பிக்கைக் கூட்டணி சார்பிலான பிரதமர் யார் என்பதை நாங்கள் அறிவிப்போம்” என்று தெரிவித்திருந்தார்.
நம்பிக்கை கூட்டணி இரண்டு வெவ்வேறு விதமான முடிவுகளை எடுக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்
முதலாவது முடிவு, அடுத்த சில மாதங்களுக்கு துன் மகாதீர் பிரதமராக நீடிப்பது, அவருக்கு துணைப் பிரதமராக அன்வார் இப்ராகிம் நியமிக்கப்படுவது என்பதாகும்.
இரண்டாவது முடிவு அன்வார் இப்ராகிம் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதாகும். மகாதீர் தரப்பினரின் ஆதரவைப் பெற அவரது மகன் முக்ரிஸ் மகாதீர் துணைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம்.
நம்பிக்கை கூட்டணியின் 90-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதமர் வேட்பாளராக அன்வார் இப்ராகிம் நிறுத்தப்படுவதையே விரும்புகின்றனர்.
தற்போது நம்பிக்கைக்கூட்டணி பக்காத்தான் பிளஸ் என அழைக்கப்படுகிறது. அமானா கட்சியின் துணைத் தலைவர் சலாஹூடின் அயூப் பிரதமர் வேட்பாளர் குறித்த ஒருமித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் எனினும் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் தெரிவித்ததாக மலேசியாகினி செய்தி தெரிவித்தது.
இன்னொரு இணைய ஊடகச் செய்தியின்படி மகாதீர் பிரதமராக 2020 இறுதிவரை நீடிக்கவும் அவருக்குத் துணைப் பிரதமராக அன்வார் இப்ராகிம் செயல்படவும் இணக்கம் காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனினும் இந்தச் செய்தியை அன்வாரின் உதவியாளர் மறுத்திருக்கிறார்.
இதற்கிடையில் ஆகக் கடைசியாக பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், “பக்காத்தான் பிளஸ் கூட்டணியின் சார்பிலான பிரதமர் வேட்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என அறிவித்திருக்கிறார்.
இப்படியாக நம்பிக்கைக் கூட்டணி தரப்பில் பிரதமர் தேர்வு தொடர்பில் இன்னும் குழப்பமும், நிச்சயமற்றத் தன்மையும் தொடர்வது பகிரங்கமாகத் தெரியவருகிறது.