கலிபோர்னியா: டுவிட்டர் நிறுவனம் ஜூன் 17 அன்று ஒரு புதிய அம்சத்தை சோதித்துப் பார்த்துள்ளது. இது பயனர்கள் தங்கள் குரலைப் பயன்படுத்தி டுவிட்டரில் பதிவுகளை பதிவிட அனுமதிக்கும். ஒரே டுவீட்டில் 140 விநாடிகள் வரை ஒலிப்பதிவு செய்ய இயலும்.
இந்த அம்சம் இப்போது ஆப்பிள் ஐஒஎஸ் இயங்குதளத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்குக் கிடைக்கும். மேலும் வரும் வாரங்களில் அதிகமான ஐஒஎஸ் பயனர்களுக்காக இது வெளியிடப்படும் என்று டுவிட்டர் தெரிவித்துள்ளது.
டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் தளங்களில் வரம்பு மீறல், துன்புறுத்தல் மற்றும் தவறான தகவல் போன்ற உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த நீண்ட காலமாக அழுத்தம் கொடுத்து வருகின்றன.
“இதை அனைவருக்கும் கொண்டு வருவதற்கு முன்னர் கூடுதல் கண்காணிப்பு அமைப்புகளை இணைக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.” என்று டுவிட்டர் செய்தித் தொடர்பாளர் அலி பவேலா ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் தெரிவித்தார்.
“எங்கள் விதிகளுக்கு ஏற்ப எந்தவொரு புகாரளிக்கப்பட்ட குரல் டுவீட்டுகளையும் நாங்கள் மதிப்பாய்வு செய்வோம், நடவடிக்கை எடுப்போம்” என அவர் கூறினார்.
கடந்த மாதம், டுவிட்டர், மினியாபோலிஸ் ஆர்ப்பாட்டங்கள் குறித்து டிரம்ப் பதிவிட்ட டுவிட்டர் பதிவிற்கு ஓர் எச்சரிக்கையை சேர்த்தது, அது வன்முறையை மகிமைப்படுத்தியது என்று கூறியிருந்தது.