சென்னை – தமிழ்த் திரையுலகம் மறக்க முடியாத பழம்பெரும் பாடகர் ஏ.எல்.ராகவன். (படம்) இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 19) அவர் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73.
ஏ.எல்.இராகவன் காலத்தால் அழியாத பல பாடல்களை தமிழர்கள் என்றும் நினைவில் போற்றும் வண்ணம் வழங்கியிருக்கிறார். இயக்குநர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் வெளிவந்த சிறந்த படங்களுள் ஒன்று நெஞ்சில் ஓர் ஆலயம். தனது பழைய காதலி மீண்டும் தனது வாழ்க்கைக்குள் நோயாளி கணவருடன் நுழைகிறார். அந்தக் கணவனுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் அந்த மருத்துவர் தனது பழைய காதலியைப் பார்த்து “எங்கிருந்தாலும் வாழ்க” எனப் பாடுவார்.
அந்தப் புகழ்பெற்ற பாடலைத் தனது மந்திரக் குரலால் வழங்கியவர் இராகவன். அதைப் போன்ற எண்ணற்ற பாடல்களைப் பாடியிருக்கிறார்.
இவரது துணைவியார் எம்.என்.இராஜமும் பழம் பெரும் நடிகையாவார். எம்.ஆர்.இராதாவின் “இரத்தக் கண்ணீர்” திரைப்படம் தொடங்கி தொடர்ந்து பல ஆண்டுகளாக நடித்து வருபவர் எம்.என்.ராஜம்.
இராகவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை 7.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவர் கொரொனா தொற்றுக்கான சிகிச்சையையும் மேற்கொண்டிருந்தார் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.
1950-ம் ஆண்டு முதல் இராகவன் திரையுலகில் பாடி வருகிறார். ‘கல்லும் கனியாகும்’ என்ற படத்தை பாடகர் டி.எம்.சௌந்தரராஜனுடன் இணைந்து தயாரித்ததோடு அந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்தார். மேலும் சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
பல படங்களில் நாகேஷ் பாடுவது போன்று அமைந்த பாடல்களுக்கு இராகவன்தான் பின்னணிக் குரல் கொடுத்தார்.
“பாப்பா பாப்பா கதை கேளு” என்ற பாடலும் “அன்று ஊமைப் பெண்ணல்லோ” என்ற பாடலும் இராகவன் குரலில் புகழ்பெற்ற பாடல்களாகும்.
எம்ஜிஆர் நடித்த “அன்பே வா” படத்தில் கல்லூரி மாணவர்கள் ஜாலியாகப் பாடுவது போன்று அமைந்த “ஒன்ஸ் எ பாப்பா” என்ற பாடலும் இராகவன் பாடி புகழ் பெற்ற பாடலாகும்.
அவரது மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் தங்களின் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.