Home One Line P2 சீனா, சிறைப்பிடித்த 10 இந்திய ராணுவ வீரர்களை விடுதலை செய்தது

சீனா, சிறைப்பிடித்த 10 இந்திய ராணுவ வீரர்களை விடுதலை செய்தது

842
0
SHARE
Ad

புதுடில்லி – கடந்த வாரம் சீனா-இந்திய எல்லைப் பகுதிகளில் நடந்த கடுமையான மோதல்களைத் தொடர்ந்து சீனா 10 இந்திய ராணுவ வீரர்களைச் சிறைப்படுத்தி வைத்திருந்தது.

தங்களுக்கு இடையிலான மோதலை தணிக்கும் வண்ணம் அந்த 10 இந்திய ராணுவ வீரர்களை தற்போது சீனா விடுதலை செய்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 19) அதிகாரபூர்வமற்ற முறையில் இந்திய அதிகாரிகள் இந்தத் தகவலை வெளியிட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

பெய்ஜிங் நகரில் விளக்கக் கூட்டம் ஒன்றில் பேசிய சீன வெளியுறவு துறை அதிகாரி இந்திய ராணுவ வீரர்கள் யாரும் சீனாவின் கைப்பிடியில் இல்லை என கூறியிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

இந்திய ராணுவ வீரர்கள் விடுதலை செய்யப்பட்டது குறித்து இந்திய ராணுவமும் இதுவரையில் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடந்த வியாழக்கிழமை இந்த இராணுவ வீரர்களின் ஒப்படைப்பு நடைபெற்றதாக இந்திய இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரையில் எந்த இராணுவ வீரரும் காணாமல் போனதாக இந்தியத் தரப்பிலிருந்து அறிவிக்கப்படவில்லை.

கடந்த திங்கட்கிழமை இரவு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த கைகலப்பில் துப்பாக்கிகள் தவிர்த்த பல்வேறு ஆயுதங்களுடன் இந்திய சீன ராணுவ வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர் அந்த தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனை இந்தியா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

சீன ராணுவம், ஆணிகள் பொருத்தப்பட்ட கம்புகள், இரும்பு கம்பிகள் ஆகியவற்றைக் கொண்டு இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்ததாக இந்தியத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கின்றது.

சீனாவின் தரப்பில் எத்தனை இராணுவ வீரர்கள் மடிந்தனர் என்பது குறித்தோ காயமுற்றனர் என்பது குறித்து அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும் அமெரிக்க உளவுத்துறை தகவல்களின்படி சீனாவின் தரப்பில் 43 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

இதுவரையில் எல்லைப்புறத் தாக்குதல்களால் இந்திய தரப்பில் 73 இந்திய இராணுவ வீரர்கள் காயமடைந்திருக்கின்றார்கள் என கூறப்படுகின்றது

இந்தியா-சீனா இடையில் இராணுவ நிலையிலும் தூதரக நிலையிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் இருநாடுகளுக்கும் இடையிலான  எல்லைப்புற பதட்டம் இன்னும் தணியவில்லை.

இதற்கிடையில் எல்லைப் புறத் தாக்குதல்கள் காரணமாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வணிகப் பரிமாற்றங்களில் பல தாக்கங்கள் ஏற்படும் என கணிக்கப்படுகின்றது.

இந்திய ரயில்வே, சீன அரசு நிறுவனம் ஒன்றிற்கு வழங்கிய குத்தகையை இரத்து செய்துள்ளது. சீனப் பொருட்களை இந்தியாவில் புறக்கணிக்க வேண்டும் என்ற இயக்கம் இந்திய வணிகர்களால் தொடங்கப்பட்டிருக்கிறது.

2014-ஆம் ஆண்டில் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் சீனாவுடன் இணக்கமான நல்லுறவுகளைப் போற்றி வந்த நரேந்திர மோடி சந்திக்கும் மிகப்பெரிய சவால் தற்போதைய நிலைமை எனக் கருதப்படுகின்றது.

சீன அதிபர் உடனான பல்வேறு பேச்சுவார்த்தைகளை இந்தியாவிலும் சீனாவிலும் மோடி நடத்தியிருந்தாலும் இந்திய-சீன உறவுகள் வலுப்பெற்று இருந்தாலும் எல்லைப்புற மோதல்கள் சீன இந்திய உறவுகளில் புதிய சிக்கல்களை உருவாக்கி இருக்கின்றன.

இதன் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 19) பிரதமர் மோடி புதுடெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டமொன்றை நடத்தி இருக்கின்றார்.

இதற்கிடையில் இந்திய ராணுவ வீரர்களின் மரணத்திற்கு அமெரிக்கத் தற்காப்பு துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ தனது நாட்டின் சார்பிலான அனுதாபத்தை தெரிவித்திருக்கின்றார்.

இந்த மோதல்களைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீனாவுடனான தனது நெருக்கத்தை குறைத்து தூதரக நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவார்-மறு ஆய்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஏற்கனவே சீனாவுடன் பகைமை பாராட்டி வரும் அமெரிக்காவுடன் கூடுதலாக நெருங்கி பொருளாதார இராணுவ ஒத்துழைப்பில் இந்தியா மேலும் தீவிரமாக ஈடுபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.