கோலாலம்பூர் – “மொகிதின் யாசின் இரட்டை குணம், இரட்டை முகம் கொண்டவர். எனக்கு முன்னால் ஒன்றைப் பேசுவார். ஆனால் நடந்து கொள்வது வேறு விதமாக இருக்கும்” என துன் மகாதீர் சாடியிருக்கிறார்.
மகாதீரைப் பிரதமராக ஏற்றுக் கொள்ள முடியாது என பிகேஆர் கட்சி திட்டவட்டமாக முடிவெடுத்திருக்கிறது. இந்நிலையில், மலேசியாகினி ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து மகாதீர் விளக்கியிருக்கிறார்.
“நாங்கள் ஒன்றாக இருக்கும் சமயத்தில், நான் பிரதமராக விரும்பவில்லை என மொகிதின் என்னிடம் கூறுவார். ஆனால் எனது முதுகுக்குப் பின்னால் அவரையே அடுத்த பிரதமராக முன்மொழியும்படி மற்றவர்களைக் கேட்டுக் கொண்டார். மொகிதினுக்கு இரண்டு விதமான குணாதிசயங்கள் இருக்கின்றன. ஒரு குணாதிசயத்தின்படி அவர் தொழுகை வாசகங்களை உச்சரிப்பார். இன்னொரு குணாதிசயத்தின்படி மக்களுக்கு அழுத்தம் கொடுத்து நசுக்குவார். தொழுகை உச்சரிக்கும்போதே மக்களை நசுக்குவார். இது அவரது உள்மன முரண்பாட்டு மோதலாகும்” என அந்தப் பேட்டியில் மகாதீர் கூறியிருக்கிறார்.
“என்னைக் கவிழ்த்த மூன்று பேர் யார்?” – மகாதீர்
மலேசியாகினி பேட்டியில் தனது அரசாங்கத்தைக் கவிழ்த்த மூன்று பேர்களையும் பெயர் குறிப்பிட்டிருக்கிறார். மொகிதின் யாசின், பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலி, பெர்சாத்து தலைமைச் செயலாளர் ஹம்சா சைனுடின் (படம்) ஆகியோரே ஆட்சியைக் கவிழ்த்த அந்த மூவர் என மகாதீர் கூறியிருக்கிறார்.
ஹம்சா சைனுடின் தற்போது மொகிதின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருக்கிறார். பெர்சாத்து கட்சியின் தலைமைச் செயலாளராகவும் செயல்படுகிறார்.
இவர்களில் மொகிதினுக்கும், ஹம்சாவுக்கும் அஸ்மின் அலி துணை புரிந்தார். பிகேஆர் கட்சியிலிருந்து 10 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிரித்துக் கூட்டி வந்தார் என்றார் மகாதீர்.
“ஹம்சாவுக்கு அன்வாரைப் பிடிக்காது. அன்வாரை விட்டுப் பிரிந்து அம்னோவுடனும் பாஸ் கட்சியுடனும் இணைய வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். அதற்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவருக்கு அன்வாரைப் பிடிக்காது. அவரைப் பழிவாங்க வேண்டும். அவ்வளவுதான். அதற்காக அன்வார், பிகேஆர் இல்லாத ஒரு கூட்டணியை நான் உருவாக்க வேண்டும் என்றார். அன்வார் பிரதமராகக் கூடாது என்பதில் மும்முரமாகப் பாடுபட்டார் ஹம்சா. ஆனால், அவரது முயற்சிக்கு நான் ஒத்துழைக்கவில்லை” எனவும் அந்தப் பேட்டியில் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.
“அஸ்மின் அலிக்கு ஏன் பதவி கொடுத்தேன்?”
அஸ்மின் அலியுடன் (படம்) நீண்ட காலம் தொடர்பு கொண்டிருந்தவர் மகாதீர். அமெரிக்காவில் அஸ்மின் மாணவராக இருந்தபோதே அவருக்குத் தெரியும்.
அன்வார் சிறையில் இருந்தபோது, அன்வாரின் பிகேஆர் கட்சியும், மகாதீரின் பெர்சாத்து கட்சியும் இணைந்து செயல்படுவதில் அஸ்மின் ஒரு பாலமாகச் செயல்பட்டார்.
“அஸ்மின் அலி மந்திரி பெசாராக இருந்து அனுபவம் வாய்ந்தவர். எனது அமைச்சரவையில் அவரை முக்கிய அமைச்சராக நியமித்தேன். அரசாங்க நிர்வாக அனுபவம் வாய்ந்தவர்கள் தேவை என்பதால் அவரை நியமித்தேன். மலாய்க்காரர்களுக்கு உதவுவார் என நினைத்தேன்” என்று மகாதீர் தெரிவித்தார்.
“அன்வாருடன் ஏற்பட்ட பிணக்கால் அவர் பிகேஆர் கட்சிக் கூட்டங்களுச் செல்லாமல் தவிர்த்தார். அப்படிச் செய்யக் கூடாது, கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என அவருக்கு அறிவுரை வழங்கியிருக்கிறேன். பிகேஆர் சம்பந்தமாக என்னிடம் ஆலோசனை கேட்டார். ஆனால் நான் தலையிட விரும்பவில்லை” என்றும் மகாதீர் குறிப்பிட்டார்.
அஸ்மின் அலி பிகேஆர் கட்சியிலிருந்து விலகி பெர்சாத்துவில் இணைவதற்கும் தான் ஒப்புதலோ ஆதரவோ வழங்கவில்லை என்றும் மகாதீர் உறுதிப்படுத்தியிருக்கிறார். “அப்படிச் செய்திருந்தால், பிகேஆர் கட்சி இரண்டாகப் பிளவுபட்டிருக்கும்” என்றும் மகாதீர் கூறினார்.
பிப்ரவரி 23-ஆம் தேதி “ஷெராட்டான் நகர்வு” (மூவ்) என விமர்சிக்கப்படும் சம்பவத்திற்குப் பின்னணியில் முக்கிய மூளையாகச் செயல்பட்டவர் அஸ்மின் அலியாவார்.
மார்ச் 1-இல் மொகிதின் பிரதமரான பின் அவரது அமைச்சரவையில் துணைப் பிரதமருக்கான தகுதியுடன் அஸ்மின் செயல்பட்டு வருகிறார்.