Home One Line P1 “முதுமைக் காலத்தில் பெற்றோர்களைத் தாங்கும் கரங்களாக வாழுங்கள்” – விக்னேஸ்வரனின் தந்தையர் தின செய்தி

“முதுமைக் காலத்தில் பெற்றோர்களைத் தாங்கும் கரங்களாக வாழுங்கள்” – விக்னேஸ்வரனின் தந்தையர் தின செய்தி

758
0
SHARE
Ad

கோலாலம்பூர் – “இன்று தந்தைக்கோர் நாள் – தந்தையர்க்கான நாள். அவரது உழைப்பும், உயர்வும் என்றுமே அவர்தம் பிள்ளைகளைச் சார்ந்தே அமைந்திருக்கின்றது என்பதால்தான், அவரது பெருமையைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் அனைத்து தந்தையர்களுக்கும் எனது இனிய தந்தையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என மஇகா தேசியத் தலைவர்  டான்ஸ்ரீ டத்தோ ச. விக்னேஸ்வரன் தந்தையர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

“ஒரு தந்தை எத்தனை ஏழையாக இருந்தாலும், சூரியனின் வெப்பம் கூட தனது பிள்ளையை சுட்டுவிடக் கூடாது இல்லை என்ற எண்ணத்தில் அந்தப் பிள்ளையை அரவணைத்துச் செல்லும் அன்புக்குத்தான் ஈடு இணையேது? தோளில் சுமந்து செல்லும் பாசத்தைக் கொண்ட தந்தையின் குணத்திற்குத்தான் ஈடு இணையேது? எதனைக் கேட்டாலும் இல்லை என்று கூறாது வாங்கித் தரும் குணத்திற்குத்தான் ஈடு இணையேது? பொறுமையும், பொறுப்பும் ஒன்றாக இணைந்த குணத்திற்குத்தான் ஈடு இணையேது? இப்படி தந்தையின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். பிள்ளைக்காக எந்தவொரு வலியையும் தாங்கும் சக்திக் கொண்ட தந்தையைக் கொண்டாடும் நாள்தான்  இன்றைய தந்தையர் நாள்” எனவும் விக்னேஸ்வரன் கூறினார்.

“தந்தைக்காக ஒரு நாள் எடுத்து கொண்டாடி வரும் நாம், அவர் படுகின்ற சிரமங்களை பிள்ளைகளாகப் புரிந்து கொண்டு, அவருக்கு ஒத்துழைப்பாகவும், உறுதுணையாகவும் இருந்திட வேண்டும். வாழும் காலத்தில் தந்தை பிள்ளைகளுக்காக பாடுபடுகிறார். அதனால், அவரது முதுமைக் காலத்தில் பிள்ளைகள்தான் அவரை தாங்கிப் பிடிக்கும் கரங்களாக இருந்திட வேண்டுமே தவிர, அவர்களை தள்ளி வைத்துப் பார்ப்பவர்களாக இருந்துவிடக் கூடாது. எனவே, ஒவ்வொரு பிள்ளையும் தந்தையின் பாசத்தை உணர்ந்து, அவரது உணர்வுக்கு மதிப்பளித்து தந்தையை நேசிக்க வேண்டும்” என்றும் விக்னேஸ்வரன் தனது பத்திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.