கோலாலம்பூர்: மலாய் ஆட்சியாளர்களின் அதிகாரம் தொடர்பான 1993-இல் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய திருத்தத்தை திரும்பப் பெறுமாறு மேலவை சபாநாயகர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மத்திய அரசுக்கு இன்று திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற மேலவையில் ஆற்றிய உரையில், சர்ச்சைக்குரிய திருத்தம் மத்திய அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அவர் கூறினார்.
“இன்றுவரை விவாதிக்கப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய 1993 திருத்தத்தை இரத்து செய்யுமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார். இன்றுடன் அவர் தனது இரண்டு தவணைக் கால மேலவை சபாநாயகர் பதவிக்காலம் முடிவடைகிறது.
“ஆட்சியாளர்கள் மற்றும் மலாய் ஆட்சியாளர்களின் மாநாட்டின் அனுமதியின்றி திருத்தங்கள் செய்யப்பட்ட ஆட்சியாளர்களின் அதிகாரத்தையும் இறையாண்மையையும் மீட்டெடுக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.
1993-ஆம் ஆண்டில் மலாய் ஆட்சியாளர்களின் அதிகாரத்தை அகற்ற நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியலமைப்பு திருத்தம், அவர்கள் சட்டத்தை மீறினால் அவர்கள் மீது வழக்குத் தொடர அனுமதிக்கிறது.
“பல முக்கியமான விஷயங்களில், அரசியல் நிலைத்தன்மையையும் இந்த நாட்டில் ஒரு பன்மை சமுதாயத்தின் எதிர்காலத்தையும் உறுதிப்படுத்த மலாய் ஆட்சியாளர்களின் சக்தி தெளிவாக அவசியம்.” என்று அவர் மேலும் கூறினார்.
புதிய மேலவைத் தலைவராக ராய்ஸ் யாத்திம்
டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரனுக்கு அடுத்ததாக புதிய நாடாளுமன்ற மேலவை தலைவராக டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
1978 முதல் 1982 வரை அவர் நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசாராக பதவி வகித்துள்ளார்.
ஜெலுபு நாடாளுமன்ற உறுப்பினராக நீண்ட காலம் சேவையாற்றியிருக்கும் அவர் பின்னர் மத்திய அமைச்சராகவும் செயலாற்றி உள்ளார்.
1974 முதல் 1986 வரை மூன்று தவணைகளுக்கு ஜெலுபு (நெகிரி செம்பிலான் ) நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இயங்கினார்.
2018-ஆம் ஆண்டில் துன் மகாதீர் நஜிப்புக்கு எதிரான அரசியல் போராட்டத்தை தொடங்கிய போது அந்தப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், பல இடங்களில் குறிப்பாக நெகிரி மாநிலத்தில் துன் மகாதீர் தலைமையிலான அணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்துள்ளார்.
மகாதீர் தலைமையிலான பெர்சாத்து கட்சியிலும் இணைந்தார் ராய்ஸ் யாத்திம். 2018 பொதுத் தேர்தலில் மீண்டும் ஜெலுபு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அந்த வாய்ப்பை மகாதீர் அவருக்கு வழங்கவில்லை.
இந்த ஆண்டில் மொகிதின் யாசின், மகாதீர் இடையிலான போராட்டத்தில் அவர் மொகிதின் யாசின் பக்கம் சேர்ந்தார். ஆரம்ப காலம் முதல் மகாதீரின் ஆதரவாளராகப் பார்க்கப்பட்டவர் திடீரென மொகிதின் பக்கம் ஆரவாரமின்றி இயங்கினார்.
நெகிரி செம்பிலான் மாநில பெர்சாத்து கட்சித் தலைவராகவும் ராய்ஸ் பதவி வகிக்கிறார்.
சில நாட்களுக்கு முன்னர் (ஜூன் 16) செனட்டராக நியமிக்கப்பட்டார்.