டெஹ்ரான் – ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் நேற்று வியாழக்கிழமை (ஜூன் 25) மிகப் பெரிய வெடிப்பு சத்தம் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வானத்தையே வெளிச்சமாக்கிய இந்த வெடிப்பு எதனால் நிகழ்ந்தது என்பது இதுவரை தெரியவில்லை என ஊடக நிறுவனங்கள் தெரிவித்தன.
கண்ணைப் பறிக்கும் ஆரஞ்சு நிற வெளிச்சக் கீற்றுகள் வான்வெளியில் பரவின. அதைத் தொடர்ந்து பெரிய அளவிலான கரும்புகை வான்வெளியைச் சூழ்ந்தது என சம்பவத்தைப் பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.
விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த அரசு அதிகாரிகள் அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதனையும் வெளியிடவில்லை. அவசர சிகிச்சை வாகனங்களுக்கான (ஆம்புலன்ஸ்) கோரிக்கை எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை என்றும் டெஹ்ரான் அவசர நடவடிக்கை மையம் தெரிவித்தது.
இதற்கிடையில் ஈரானின் ஃபார்ஸ் மாநிலத்திலுள்ள ஷிராஸ் நகரிலுள்ள மின்சார உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அந்நகரின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று வியாழக்கிழமை உள்ளூர் நேரம் இரவு 11.21 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து ஷிராஸ் நகரின் பெரும்பகுதி தற்போது இருளில் மூழ்கியுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து வெளிநாடு ஒன்று ஈரான் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறது என சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஆகக் கடைசியான தகவல்களின்படி ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.