கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான முட்டுக்கட்டை தொடர்கையில், துன் டாக்டர் மகாதீர் முகமட் மீண்டும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பொருத்தமான வேட்பாளர் அல்ல, ஏனெனில் பிகேஆர் தலைவர் மலாய்க்காரர்களிடையே பிரபலமாக இல்லை என்று கூறியுள்ளார்.
சிஎன்பிசிக்கு அளித்த பேட்டியின் போது டாக்டர் மகாதீர் இதனைத் தெரிவித்தார்.
“அவர் மலாய்க்காரர்களுடன் மிகவும் பிரபலமாக இல்லை. இப்போது, எந்தவொரு கட்சியும் தேர்தலில் வெற்றி பெற மலாய்க்காரர்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
“அவர் பிரபலமாக இல்லாததால், ஒரு பன்முகக் கட்சியின் தலைவராக இருப்பதால், இந்தத் தேர்தலில் வெற்றிபெற அவருக்கு மலாய்க்காரர்கள் ஆதரிக்கும் தலைவர் ஒருவர் தேவை.
“பிரதமர் வேட்பாளராக நானே, மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறுவேன் என்று நான் நினைக்கிறேன்.” என்று டாக்டர் மகாதீர் புதன்கிழமை கூறினார்.
டாக்டர் மகாதீர் கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பெறத் தவறிவிட்டார் என்று துன் மகாதீர் கூறினார்.
“நான் சேர்ந்தபோதுதான் அவர்கள் வெற்றி பெற முடிந்தது. இது ஒரு சாதனை, ஏனென்றால் 60 ஆண்டுகளாக ஒரே அரசாங்கம்ஆட்சி செய்தது.
“மாற்றம் அடைந்தது இதுவே முதல் முறை.” என்று அவர் கூறினார்.
டாக்டர் மகாதீர் மற்றும் அன்வார் இப்ராகிம் தரப்புகள் இப்போது பிரதமர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதில் முரண்பாட்டில் சிக்கியுள்ளன.
செவ்வாயன்று, அமானா கட்சியின் தகவல் தொடர்பு இயக்குனர் காலிட் அப்துல் சமாட் கூறுகையில், வாரிசான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமராக முன்மொழியப்பட்டது விரைவில் கூட்டணியின் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றத்தால் விவாதிக்கப்பட உள்ளது என்று கூறினார்.
இதே போன்று, ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங், பிரதமருக்கான தேர்வு அதன் அனைத்து கூட்டணி கட்சிகளின் ஒருமித்த கருத்தை கொண்டிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.