சென்னை: ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு பின்னர் இன்று முதல் வழிபாட்டுத்தலங்களை திறப்பதற்கான உத்தரவையும் வழிகாட்டுதல்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 585,000-ஆக உயர்ந்துள்ள நிலையில், இத்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 90,000-க்கும் அதிகமான தொற்று நோயாளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள 10,000-க்கும் குறைவான வருவாய் கொண்ட வழிபாட்டுத்தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்படி, வழிபாட்டுத்தலங்களில் தொற்று அறிகுறியற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், நீரிழிவு நோயாளிகள், உயர் இரத்த அழுத்த நோயாளிகள், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் என நாள்பட்ட நோயாளிகள் வழிபாட்டுத்தலங்களுக்குள் செல்ல அனுமதியில்லை.
முதியவர்களும் வழிபாட்டுத்தலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.