கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஜூலை 1) அரசாங்க மற்றும் தனியார் பாலர் பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில், பாலர் பள்ளிகளை ஜூலை 1 முதல் மீண்டும் திறக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்திருந்தார்.
கல்வி அமைச்சின் கீழ் உள்ள 6,216 பாலர் பாடசாலைகளும், 7,887 தனியார் பாலர் பள்ளிகளும், தேசிய ஒற்றுமை அமைச்சகத்தின் கீழ் உள்ள 1,781 மழலையர் பள்ளிகளும், ஊராட்சி வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் உள்ள 8,530 மழலையர் பள்ளிகளும் ஈடுபட்டுள்ளன என்று அவர் கூறியிருந்தார்.
இதனிடையே, பாலர் பள்ளிகளை மீண்டும் திறக்கும் மேலாண்மை வழிகாட்டுதல்களை, கல்வி அமைச்சகம், ஊராட்சி வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சகம் வெளியிட்டிருந்தன.
சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து இந்த வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இணையதளத்தில், வழிகாட்டுதல்களின் நோக்கம் மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாதுகாப்பாளர்கள் வகிக்கும் பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பாலர் பள்ளி செயல்பாடு, வருகை மற்றும் புறப்படும் நேரம் மற்றும் பாலர் கற்பித்தல் மற்றும் கற்றல் போன்ற செயல்படுத்தல் வழிகாட்டுதல்களும் இதில் அடங்கும்.