Home One Line P1 அவைத் தலைவரைத் தற்காக்க மகாதீர்-அன்வார் இணைகின்றனர்

அவைத் தலைவரைத் தற்காக்க மகாதீர்-அன்வார் இணைகின்றனர்

489
0
SHARE
Ad
அன்வார் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

கோலாலம்பூர் – நாளை திங்கட்கிழமை (ஜூலை 13) பரபரப்பான சூழலில் கூடுகிறது மலேசிய நாடாளுமன்றம். இந்தக் கூட்டத்தில் நடப்பு அவைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் அரிப் முகமட் யூசோப், அவையின் துணைத் தலைவர் இங்கா கோர் மிங் இருவரையும் நீக்கும் தீர்மானத்தைச் சமர்ப்பித்திருக்கிறார் பிரதமர் மொகிதின் யாசின்.

அந்தத் தீர்மானத்திற்கு எதிராக ஒன்றாக அணி திரள நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. துன் மகாதீர் அணியினரும் அன்வார் இப்ராகிம் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணியினரும் அவைத் தலைவரை நீக்கும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க இன்று முடிவெடுத்தனர்.

நாளைய நாடாளுமன்றக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் முதல் கட்ட நடப்புகளில் ஒன்றாக மொகிதின் யாசின், அவைத் தலைவரை நீக்க, மொகிதின் சமர்ப்பித்திருக்கும் தீர்மானம் இடம் பெற்றிருக்கிறது.

#TamilSchoolmychoice

அதே வேளையில் மொகிதின் யாசின் மீது துன் மகாதீர் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானமும் சமர்ப்பிக்கப்பட்டு, நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இறுதிப் பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்தத் தீர்மானம் மீது முதலில் வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்பில்லை.

அவைத் தலைவரை நீக்கும் தீர்மானமே மொகிதின் மீதான ஆதரவையும் சுட்டிக் காட்டும் நிலைக்களனாக நாளை பார்க்கப்படும். தீர்மானம் முறியடிக்கப்பட்டால் மொகிதின் யாசினுக்கு ஆதரவில்லை என்றும், தீர்மானம் வெற்றி பெற்றால் மொகிதினுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்றும் கொள்ளப்படும்.

கூட்டணிகளின் கூட்டங்கள்

வழக்கமாக நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பாக ஆளும் கட்சியினரும், எதிர்க் கட்சியினரும் தனித்தனியே தத்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் நடத்துவது வழக்கம்.

அந்த வகையில் இன்று நான்கு வெவ்வேறு கூட்டங்கள் நடத்தப்படுவதாக ஊடகங்கள் தெரிவித்தன.

மொகிதின் தலைமையிலான தேசியக் கூட்டணி, நம்பிக்கைக் கூட்டணி, மகாதீர், ஷாபி அப்டாலின் வாரிசான் சபா இணைந்த கூட்டணி என்ற மூன்று தரப்புகள் தனித்தனியாக சந்திப்புக் கூட்டங்களை இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியிருக்கின்றன.

இதற்கிடையில் தேசிய முன்னணியும் தனியாக சந்திப்புக் கூட்டம் ஒன்றை இன்று காலை 11.00 மணியளவில் அம்னோ தலைமையகமான புத்ரா உலக வாணிப மையத்தில் நடத்தியிருக்கிறது. அம்னோ, மஇகா, மசீச, சபாவின் பிபிஆர்எஸ் கட்சிகள் உள்ளடங்கிய தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகள் இன்றைய மூன்று மணிநேரக் கூட்டத்தில் கலந்து கொண்டன.

தேசிய முன்னணித் தலைவர் சாஹிட் ஹாமிடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமரும் தேசிய முன்னணி ஆலோசகருமான நஜிப் துன் ரசாக்கும் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டம் முடிவடைந்த பின்னர் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் பிற்பகல் 3.00 மணியளவில் புத்ரா ஜெயாவில் நடைபெற்றது. நாளை நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் எல்லாத் தீர்மானங்களுக்கும் ஆதரவளிக்க இந்தக் கூட்டம் முடிவெடுத்தது என சாஹிட் ஹாமிடி தெரிவித்தார்.

அஸ்மின் அலி அணியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அன்வார் தலைமையில் நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தேசியக் கூட்டணி கூட்டம் நடைபெற்ற அதே நேரத்தில் பிற்பகல் 3.00 மணியளவில் அன்வார் இப்ராகிம் தலைமையில் நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்புக் கூட்டம் ஷா ஆலாமில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் துன் மகாதீர் அணிக்கும், வாரிசான் அணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டாலும், அவர்கள் யாரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எனினும் அவைத் தலைவரை நீக்கும் தீர்மானத்திற்கு எதிராகவே அவர்கள் நாளை வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று அமானா, ஜசெக கட்சிப் பிரதிநிதிகளும், மகாதீர், வாரிசான் தரப்பு பிரதிநிதிகளும் இணைந்த கலந்துரையாடல் கூட்டம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. இதில் எதிர்க்கட்சித் தரப்புகளை ஒன்றிணைக்க, இணக்கமாக செயல்பட ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் மகாதீர் தரப்பினரும், வாரிசான் கட்சியினரும் தனியாக மற்றொரு இடத்தில் தங்களின் சந்திப்புக்கூட்டத்தை நடத்தினர் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இப்படியாகப் பல்வேறு பரபரப்புகளுக்கிடையே ஜூலை 13-இல் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அடுத்த 25 நாட்களுக்கு நடைபெறும்.