Home One Line P2 முதன் முறையாக முகக் கவசம் அணிந்த டிரம்ப்

முதன் முறையாக முகக் கவசம் அணிந்த டிரம்ப்

408
0
SHARE
Ad

வாஷிங்டன்: கொவிட்-19 பாதிப்புகள் தொடங்கிய நாள்முதல் அமெரிக்காவையே அந்தத் தொற்று சூறையாடிக் கொண்டிருந்த காலகட்டத்திலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எந்தப் பொது நிகழ்ச்சியிலும் முகக் கவசம் அணிந்து கலந்து கொண்டதில்லை.

உலகம் முழுக்க அனைத்து நாட்டு மருத்துவர்களும் கொரொனா பாதிப்பிலிருந்து விடுபட முகக் கவசம் அணிவது சரியான பாதுகாப்பு முறை என்று கூறியிருந்தபோதும் டிரம்ப் அதைப் பின்பற்றியதில்லை.

ஆனால் நேற்று சனிக்கிழமை (ஜூலை 11) முதன் முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது டிரம்ப் கறுப்பு நிற முகக் கவசம் அணிந்து வந்தார்.

#TamilSchoolmychoice

காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இராணுவ வீரர்களைச் சந்திக்க மருத்துவமனைக்கு வந்தபோதே டிரம்ப் முகக் கவசம் அணிந்திருந்தார்.

“முகக் கவசம் அணிவதற்கு நான் எப்போதுமே எதிர்ப்புத் தெரிவிப்பவனல்ல! ஆனால் அதற்கான நேரமும் இடமும் இருக்கிறது எனக் கருதுகிறேன். குறிப்பாக இங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களைச் சந்திக்கும்போதும், அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வருபவர்களையும் சந்திக்க வரும்போது முகக் கவசம் அணிந்து வருவது பொருத்தமானது என நினைக்கிறேன்” என தனது மருத்துவமனை வருகைக்கு முன்பாக பத்திரிகையாளர்களிடம் பேசியபோது டிரம்ப் தெரிவித்தார்.

இதற்கிடையில், கொவிட்-19 தொற்றின் தீவிரத் தாக்கம் அமெரிக்காவை இன்னும் கடுமையாகத் தாக்கி வருகிறது. சனிக்கிழமை வரையில் 33 மாநிலங்களில் கொவிட்-19 தொற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

சனிக்கிழமை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 61 ஆயிரம் புதிய பாதிப்புகள் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இதுவரை 3,245,925 கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது.

மரண எண்ணிக்கை இதுவரையில் 134,777 ஆக அமெரிக்காவில் பதிவாகியிருக்கிறது.

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனை தரவுகளின்படி சனிக்கிழமை வரையிலான ஒருநாளில் கொவிட்-19 தொடர்பில் 61,352 புதிய பாதிப்புகளும் 685 மரணங்களும் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டன.