
கோலாலம்பூர்: பெர்சாத்து அவைத் தலைவர் பதவிக்கு எவரும் போட்டியிடவில்லை என்று கட்சியின் தேர்தல் குழுத் தெரிவித்துள்ளது.
முன்னதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இப்பதவியை வகித்து வந்தார்.
இதற்கிடையில், பெர்சாத்து தலைவர் பதவிக்கான ஒரே வேட்பாளர் மொகிதின் யாசின் என்றும் அது அறிவித்தது.
துணைத் தலைவர் பதவிக்கு, பேராக் மந்திரி பெசார், அகமட் பைசால் அசுமு மட்டுமே போட்டியிடுகிறார்.
முன்னதாக, இன்று உச்சமன்றக் குழு, இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக கட்சி தலைமையகத்தில் எண் குலுக்கல் நடத்தப்பட்டது.
இதனை பெர்சாத்து தேர்வுக் குழுவின் தலைவர் சைட் ஹாமிட் அல்பார் (படம்) கூறினார்.
வேட்பாளர்களின் எண் பட்டியலை உறுப்பினர்கள் பெர்சாத்துவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் http://pribumibersatu.org.my/sys/index.php/calon_mpt அணுகலாம்.
“அனைத்து தொகுதிகளுக்கும் விநியோகிக்கப்படும் பட்டியலில் வேட்பாளர்களின் பட்டங்கள் உட்பட தங்கள் பெயர்களை அச்சிடுவதற்கான விவரத்தை தேர்தல் குழு கவனத்தில் எடுத்துக் கொண்டது.
“வாக்குச் சீட்டில் தங்கள் பெயர்களின் அதிகாரப்பூர்வ அச்சில் மாற்றங்களைச் செய்ய விரும்பும் வேட்பாளர்கள், ஜூலை 25- க்கு முன்னர் jpp.bersatu@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக எழுத்து மூலம் தெரிவிக்கலாம்” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பெர்சாத்து உதவித் தலைவர் பதவிக்கு 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் ரொனால்ட் கியாண்டி, முகமட் ரெட்சுவான் யூசோப், அப்துல் ராஷிட் அப்துல் ரஹ்மான், மஸ்லான் புஜாங் மற்றும் முகமட் ராட்ஸி முகமட் ஜிடின் ஆகியோரும் அடங்குவர்.
பெர்சாத்து இளைஞர் தலைமைப் பொறுப்புக்கு, இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வான் அகமட் பைசால் வான் அகமட் கமால், முகமட் முசாம்மில் இஸ்மாயில் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதற்கிடையில், பெர்சாத்து மகளிர் தலைமைப் பதவிக்கு நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் ஒருவர் அமைச்சராக இருக்கும் ரினா ஹருணும் அடங்குவார்.