கோலாலம்பூர்: மக்களவை சபாநாயகர் சர்ச்சையை இத்துடன் விட்டுவிடுமாறு முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நடந்தது எதுவும் சட்டத்திற்கு எதிரானது அல்ல என்று அவர் கூறியுள்ளார்.
மக்களவையில் சபாநாயகரை எந்நேரத்திலும் நீக்குவதற்கான சட்டம் உள்ளது. அதன்படியே முகமட் அரிப் முகமட் யூசோப் நீக்கப்பட்டதும் அடங்கும் என்று நஜிப் குறிப்பிட்டார்.
டத்தோ அசார் அசிசான் ஹருனை புதிய சபாநாயகராக நியமிக்க வேண்டும் என்ற தீர்மானம் வாக்களிக்காமல் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டதை நஜிப் சுட்டிக் காட்டினார்.
“நம்பிக்கைக் கூட்டணி மத்திய அரசாங்கத்தை அமைத்து, டான்ஸ்ரீ அரிப்பை சபாநாயகராக முன்மொழிந்தபோதும் வாக்களிப்பு இல்லை என்பதை நான் எதிர்க்கட்சிக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
“எனவே, புதிய சபாநாயகர் நியமிப்பதை அவர்கள் விமர்சிப்பது மிகவும் பாசாங்குத்தனமானது” என்று அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத் தலைவராக அசார் நம்பிக்கைக் கூட்டணியின் தேர்வு என்பதை நஜிப் எதிரணியினருக்கு நினைவுப்படுத்தினார்.
“அவர் ஒரு நியாயமான நபர் அல்ல, திறமையான நபர் அல்ல அல்லது அவருக்கு ஒருமைப்பாடு இல்லை என்று நீங்கள் நினைத்தால், அவரை ஏன் தேர்தல் ஆணையத் தலைவராக நியமித்தீர்கள்? அல்லது தேர்தல்கள் நியாயமாகவும் நேர்மையுடனும் இருக்கத் தேவையில்லை என்று நீங்கள் நினைத்தீர்களா? ” என்று நஜிப் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சியினர் அரசியல் விளையாடுவதற்குப் பதிலாக கொவிட்19, பொருளாதாரம் போன்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
அவர்கள் ஒரு திறமையான எதிரணியாக இருக்க வேண்டும். மேலும், உண்மைகளையும் புள்ளிவிவரங்களையும் பயன்படுத்தி விவாதம் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.