Home One Line P2 ஜானி வாக்கர் விஸ்கி : இனி காகிதப் புட்டிகளில்…

ஜானி வாக்கர் விஸ்கி : இனி காகிதப் புட்டிகளில்…

1432
0
SHARE
Ad

இலண்டன் : விஸ்கி என்ற மதுபானம் என்று வந்துவிட்டால் உலகம் முழுவதும் உள்ள மதுபானப் பிரியர்களின் ஒருமுகமான தேர்வு – ஜானி வாக்கர் முத்திரை பதித்த இரக விஸ்கிதான்!

விஸ்கி மதுபானத்திற்குப் பெயர் பெற்ற ஸ்காட்லாந்து மலைப் பிரதேசங்களின் தூய்மையான நீர், செழுமையான பயிர்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஜானி வாக்கர் விஸ்கி பல்வேறு அளவுகளில் கண்ணாடிப் புட்டிகளில் கிடைக்கிறது.

இனி அடுத்த வருடம் முதற்கொண்டு ஜானி வாக்கர் விஸ்கி காகிதப் புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

நீண்டகாலம் தாக்குப் பிடிக்கக் கூடிய, மரம் சார்ந்த மூலப் பொருளை அடிப்படையாகக் கொண்ட காகிதப் புட்டிகளில் ஜானிவாக்கர் விஸ்கியை அடைத்து விற்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நெகிழியும் (பிளாஸ்டிக்) இந்த இரகப் புட்டிகளில் பயன்படுத்தப்படாது. அடுத்த ஆண்டு முதல் இந்தப் புதிய இரகப் புட்டிகள் சந்தைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சூழியலுக்கு ஏற்ற வகையில் இந்தக் காகிதப் புட்டிகள் தயாரிக்கப்படும்.

மற்ற பானங்களுக்கும் இனி இதே போன்ற புட்டிகள்

ஜானிவாக்கர் விஸ்கியின் தயாரிப்பு உரிமம் பெற்ற நிறுவனம் டியாஜியோ (Diageo). புதிய காகிதப் புட்டிகளுக்கான தொழில்நுட்பத்தை இந்த நிறுவனம் பைலட் லைட் (Pilot Lite) என்ற நிருவாக நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியது. பல்பெக்ஸ் லிமிடெட் (Pulpex Limited) என்பது காகிதப் புட்டிகளைத் தயாரிக்க நிறுவப்பட்ட பிரத்தியேக நிறுவனமாகும்.

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி யுனிலிவர், பெப்சிகோ போன்ற நிறுவனங்களின் பொருட்களுக்குமான காகிதப் புட்டிகளைத் தயாரிப்பதற்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக டியாஜியோ இன்று திங்கட்கிழமை (ஜூலை 20) வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தது.

புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு உணவுப் பொருட்களுக்கும்,  பானங்களுக்குமான புட்டிகளைத் தயாரிப்பதன் மூலம் நெகிழிக்கான பயன்பாட்டைக் குறைக்க டியாஜியோ திட்டமிட்டுள்ளது.

இதே நோக்கத்தோடு மறுசுழற்சி செய்யக் கூடிய கண்ணாடிப் புட்டிகளை (போத்தல்கள்) பயன்படுத்தவிருப்பதாக கின்னஸ் பீர் உற்பத்தி நிறுவனம் அறிவித்தது.

டென்மார்க்கின் கார்ல்ஸ்பெர்க் நிறுவனமோ தனது பீர் பானங்களுக்காக நீண்ட காலம் தாக்குப் பிடிக்கக் கூடிய மரம் சார்ந்த புட்டிகளைப் பயன்படுத்தவிருப்பதாக அறிவித்தது.

இதைப் போலவே, பீர், மதுபானம், குளிர்பானங்கள் போன்றவற்றைப் புட்டிகளில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்திலான புட்டிகளுக்கு மாறுவதற்கு தயாராகி வருகின்றன.