Home One Line P1 68 வயதை எட்டும் நஜீப் – இந்திய சமுதாயத்திற்கு பல வழிகளில் உதவினார்

68 வயதை எட்டும் நஜீப் – இந்திய சமுதாயத்திற்கு பல வழிகளில் உதவினார்

770
0
SHARE
Ad
படம்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்

(இன்று ஜூலை 23 நஜிப் துன் ரசாக்கின் பிறந்த நாள். ஊழல் குற்றச்சாட்டுகளிலும் வழக்குகளிலும் இன்று அவர் சிக்கியிருந்தாலும் அன்று பிரதமராக இருந்த காலத்தில் இந்திய சமுதாயத்திற்கு ஆற்றிய நற்பணிகளை நினைவு கூர்கிறார் எழுத்தாளர் நக்கீரன்)

கோலாலம்பூர்: 2020 ஜூலைத் திங்கள் 23-ஆம் நாளில் 68 வயதை எட்டும் மேநாள் பிரதமர் டத்தோஸ்ரீ முகமது நஜிப் துன் அப்துல் ரசாக்கின் தலைமைத்துவ காலம் மலேசிய இந்திய சமுதாயத்திற்கு வசந்த காலத்தைப் போன்றது.

தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ சிறப்புகளுக்கு உரிய நஜிப், பிறந்ததே மாநில (பகாங்) தலைமைச் செயலக வளாகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. 40 ஆண்டுகளாக ஒரே(பெக்கான்) நாடாளுமனறத் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக விளங்கும் இவர், 22 வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அம்னோ தலைமையிலான அரசியல் கூட்டணி நாட்டை ஆண்ட போதிலும் 2009 முதல் 2018 வரை இவர் பிரதமராக இருந்து நாட்டை வழிநடத்திய காலம், மலேசிய இந்திய சமுதாயத்திற்கு பலவகையாலும் குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

நாட்டின் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை 880-யிலிருந்து படிப்படியாகக் குறைந்து 523-இல் நிலைபெற்றிருந்த நிலையில், இவரின் காலத்தில் ஏழு புதிய தமிழ்ப் பள்ளிகள் புதிய உரிமத்துடன் உருவாக்கப்பட்டன.

சுதந்திரத்திற்கு முன்பு, பெரும்பாலும் பிரிட்டீஷ் மலாயாவில் உருவாக்கப்பட்ட தமிழ்ப் பள்ளிகள் ஒன்றுக்குகூட உரிமம் இல்லை. தனியார் நிலங்களில் தமிழ்ப் பள்ளிகள் உருவாக்கப்பட்டதால், தோட்டத் துண்டாடல், தொழிலாளர் இடப்பெயர்வு, தோட்டப் பரிமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் தமிழ்ப் பள்ளிகளை இழந்தாலும் அந்தந்தப் பள்ளிகளுக்கான உரிமம் இன்மையால் அவற்றை மீள உருவாக்க முடியவில்லை.

இந்தச் சூழ்நிலையில்தான் இந்திய மாணவர் சமுதாயத்தின்  நலம் கருதி, ஜோகூர்  மாசாய் ஸ்ரீ ஆலாம் தமிழ்ப்பள்ளி, கிள்ளான் செந்தோசா தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர் தாமான் மாணிக்கவாசகம் தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர் செராஸ் தாமான் மக்கோத்தா தமிழ்ப்பள்ளி, பேராக் சுங்கை சிப்புட் ஹீ வூட் தமிழ்ப்பள்ளி, கெடா சுங்கைப்பட்டாணி தாமான் கெலாடி தமிழ்ப்பள்ளி,  கெடா லூனாஸ் பாயா பெசார் தமிழ்ப் பள்ளி ஆகிய ஏழு தமிழ்ப் பள்ளிகளும் நஜீப் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டன.

மலேசிய பிரதமர்களில் புதிய தமிழ்ப் பள்ளியை உருவாக்கியவர் இவர் ஒருவர்தான் என்று இதன் தொடர்பில் ஒருங்கிணைந்து பணி ஆற்றியவரும்  அப்போதைய மஇகா தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் சதாசிவம் நஜீப் பிறந்த நாள் தொடர்பில் நினைவு கூர்கிறார்.

படம்: முன்னாள் மஇகா தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம்

தவிர, ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமர் பொறுப்பு வகித்த காலத்தில், தமிழ்ப் பள்ளிகளில் இணை கட்டடம், மாணவர் மறுமலர்ச்சித் திட்ட நிதி, பள்ளி மண்டபம், நூலகம், கணினி மையம், விளையாட்டுத் திடல், மாற்றுப் பள்ளி என்றெல்லாம் 380 தமிழ்ப் பள்ளிகளின் மறு உருவாக்கத்திற்காக எண்பது கோடி வெள்ளி வரை மானியத்தை அள்ளி அள்ளித் தந்தவர் நஜீப் என்று சுப்ரா குறிப்பிடுகிறார்.

இத்துடன், மலேசியக் கல்விச் சான்றிதழ்(எஸ்பிஎம்) தேர்வுக்காக அதிகபட்சம் 10 பாடங்கள் என்று வரையறுக்கப்பட்ட நிலையில், தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தமிழ் மற்றும் தமிழிலக்கியப் பாடங்களையும் படிப்பதற்கு ஏதுவாக எஸ்பிஎம் தேர்வில் 12 பாடங்கள் வரை எடுக்கலாம் என்று அனுமதி அளித்ததுடன், உயர் கல்வி நிலையங்களில் பிடிபிடிஎன் கடன் உதவிக்காக தமிழ் மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தமிழ், தமிழிலக்கியப் பாடங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் வண்ணம் செய்தவர் நஜீப்.

தவிர, தமிழ் இலக்கியப் பாட ஆசிரியர்களின் அமைப்பான இலக்கியகத்தின்வழி, ஏறக்குறைய 4,000 மாணவர்களுக்கு எஸ்பிஎம் தமிழ், தமிழிலக்கிய பாடநூல்கள் இலவயமாகக் கிடைக்கவும் மஇகா எடுத்த முன்னெடுப்பிற்கு துணை புரிந்தவர் நஜீப்.

தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல்(உப்சி) பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவு ஏற்படுத்தப்பட்டதும் நஜீப் காலத்தில்தான். இப்போது, முனைவர் மனோன்மணி அண்ணாமலை தலைவராக இருக்கும் அந்தத் துறைக்கு முனைவர் சாமிக்கண்ணு முதல் தலைவராக பணியாற்றினார்.

2016-2017 காலக் கட்டத்தில் தற்காலிக தமிழாசிரியர்கள் வேலையின்றி சிரமப்பட்ட நேரத்தில், அப்படிப்பட்ட சுமார் 3,000 தற்காலிக ஆசிரியர்கள் பயிற்சி ஆசிரியர்களாக உருமாற்றப்பட்டு தமிழ்ப்பள்ளிகளில் பணியில் அமர்த்தப்படவும் துணைபுரிந்தவர் நஜிப்.

இந்தியர்களின் சமுதாய – பொருளாதார மேம்பாட்டிற்காக பிரதமர் துறையில் ஓர் அமைச்சகக் குழுவை உருவாக்கி அதற்கு பிரதமர்  துறையில் இருந்து நிதி ஒதுக்கியதுடன், அக்குழுவிற்கு அவரே தலைமை ஏற்றிருந்தார்.

அந்தக் காலக்கட்டத்தில் உருவானதுதான் செடிக். இதன் மூலம் இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த அரசு சாரா அமைப்புகள், ஆலயங்களுக்கு வகை தொகையின்றி மானியங்களை வாரிவாரி வழங்கினார் பிரதமர் நஜீப். மொத்தத்தில், டத்தோஸ்ரீ நஜீப் தலைமைத்துவ காலம், இந்திய சமுதாயத்திற்கு வசந்த காலம். அதுபோன்ற வாய்ப்பு இனி அமையுமா என்பது ஐயம்தான். குறிப்பாக, 2013 பொதுத் தேர்தலுக்கு முன் இந்திய சமுதாயத்திற்கான ‘சிறப்பு பொருளாதாரத் திட்டத்தை(Blue Print) வரைந்த நஜிப், 2018 பொதுத் தேர்தல் முடிவின் காரணமாக அதை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது என்று மருத்துவரும் மஇகாவின் மேநாள் தலைவருமான டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

நாட்டின் இரண்டாவது பிரதமர் துன் ரசாக்கின் மூத்த புதல்வரான நஜீப். தொடக்கக் கல்வியை கோலாலம்பூரிலும் பட்டப்படிப்பை இங்கிலாந்து நொட்டிங்காம் பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.

தொழில்நுட்ப பொருளாதாரத் துறை பட்டதாரியான இவர், நாடு திரும்பியதும் தேசிய வங்கியான பேங்க் நெகாராவிலும் பெட்ரோனாஸ் நிறுவனத்திலும் பணியாற்றிய நிலையில், தந்தையும் பிரதமருமான துன் ரசாக் மறைவுற்றதைத் தொடர்ந்து, ரசாக் தேர்ந்தெடுக்கப்பட்ட பெக்கான் தொகுதியில் 1976-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் களமிறங்கி போட்டியின்றி நாடாளுமன்றத்திற்குத் தேர்வானார் நஜீப்.

பல்வேறு துறைகளில் துணை அமைச்சராகப் பொறுப்பேற்று பரந்த அனுபவம் வாய்த்த நஜீப், கல்வித் துறை, பாதுகாப்புத் துறை என்றெல்லாம் முக்கியமான துறைகளுக்கு பொறுப்பேற்ற நிலையில், துன் அப்துல்லா படாவியின் தலைமையில் துணைப் பிரதமராக கடமை ஆற்றினார். இடையில் 1982 முதல் 1986வரை மந்திரி பெசாராக பகாங் மாநிலத்தை வழி நடத்திய அனுபவமும் உண்டு இவருக்கு.

அம்னோவின்வழி அரசியலில் ஈடுபட்ட நஜீப், 1976-இல் முதன் முதலாக பெக்கான் கிளை இளைஞர் பிரிவு துணைத் தலைவர் பொறுப்பேற்றபின் படிப்படியாக தேசியத் தலைவராக உயர்ந்தார்.

நஜீப் மீது பல்வேறு குறை கூறல்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்த நிலையில், சில பிரச்சனைகள் நீதிமன்றம் வரை சென்றுள்ளன. இவை யாவும் நிருவாகம் மற்றும் அரசியல் தொடர்பானவை. இவற்றை புறந்தள்ளி விட்டு, பொதுவாக நோக்கினால், இவர் பிரதமராக இருந்த காலத்தில் மலேசிய இந்திய சமுதாயத்திற்கு அணுக்கமாகவும் அணுசரணையாகவும்  இருந்தார் என்பது உண்மை.

தீபாவளி, பொங்கல் பண்டிகைக் காலங்களில் ஜிப்பா-பைஜாமா அணிந்து கொண்டு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் இவர் மட்டும்தான். அதைப்போல, தைப்பூச விழாக் காலத்தில் ஜிப்பாவுடன் பத்துமலைக்கு வருகை தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

குறிப்பாக, இந்திய சமுதாயத்தின் வர்த்தக – தொழில் துறைக்கு பல வகையில் அணுகூலமாக நடந்து கொண்ட நஜீப், 2011இல் 30,000 தொழிலாளர்களை இந்தியாவில் இருந்து வரவழைக்க ஒப்புதல் அளித்து உணவகம், ஜவுளி, ஆபரணத் தொழில், முடி திருத்தகம், மளிகைக் கடை உள்ளிட்ட இந்திய பாரம்பரிய தொழில்களுக்கு துணைபுரிந்தார்.

இந்திய உணவகங்களில் அநாயாசமாக புகுந்து இட்லி- தோசை சாப்பிடும் வழக்கத்தை இன்றளவும் கொண்டிருக்கும் நஜீப்மீது, இந்தியர்களுக்கு ஒருவித பிடிப்பு உண்டு.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை பல மாற்றங்களைக் கொண்டுவந்த இவர், அந்நிய முதலீட்டிற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதும் ஜிஎஸ்டி என்னும் பொருள் சேவை வரியை அறிமுகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

ஜூலை 23-இல் பிறந்த நாள் காணும் அவருக்கு அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு இந்திய சமுதாயத்திற்கு இழைத்த நன்மைகளை மனதில் கொண்டு, பல்லாண்டு வாழ்கவென இனிய பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம்.

⁃நக்கீரன்